
சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கில் வரும் செப். 20-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிடுகையில், ‘‘சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாஜகவின் அரசியல் ரீதியிலான அழுத்தம் காரணமாகவே செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரித்தபோது பாஜகவில் ஏன் சேரக்கூடாது என கேள்வி எழுப்பி அழைப்பு விடுத்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட மி்ன்னணு சாதனங்களை அமலாக்கத்துறை 6 நாட்களாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதில் பல திருத்தங்கள் நடைபெற்றுள்ளது. செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் இருந்த 284 பைல்களில் 222 பைல்கள் அழிக்கப்பட்டு, புதிதாக 441 பைல்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த பென்டிரைவ் மூன்று முறை தடயவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டு அவர்கள் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில் இருந்து பெறப்பட்டவை அல்ல. ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவில் இருந்து பெறப்பட்டவை. ரூ.1.34 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்த குற்றச்சாட்டு 9 ஆண்டுகளுக்கு முந்தையது. அதன்பிறகு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை வருமான வரித்துறை ஏற்றுள்ளது. அந்த வருமான வரி கணக்குகளைப் பார்த்தாலே உண்மை புரியும். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. செந்தில் பாலாஜி யாரிடமும் நேரடியாக பணத்தை பெறவில்லை.
தற்போதுள்ள உடல் நிலையில் அவரால் அரை மணி நேரத்துக்கு மேல் நிற்ககூட முடியாது. அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் தயார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டனர்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் அமலாக்கத் துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் தங்களது வாதத்தி்ல், ‘‘அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பெற்ற லஞ்சப்பணத்தை வங்கி பரிவர்த்தனை மூலமாக பெற்றிருந்தால் மட்டுமேவருமான வரி கணக்கை ஆய்வு வேண்டும். மாறாக ரொக்கமாக பெற்றிருக்கலாம். சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. அதற்கு முகாந்திரம் இருந்ததால்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வருமான வரி கணக்கை ஏற்றுக்கொண்டு விட்டால் மட்டுமே அது சட்டப்பூர்வ பணமாகி விடாது. அமலாக்கத்துறை வழக்கைமற்ற வழக்குகளைப் போல பாவி்க்கமுடியாது. அவர் இன்னும் அமைச்சராகத்தான் பதவியில் நீடித்து வருகிறார். அரசியல் ரீதியாக செல்வாக்குமிக்க அவரை ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்துவிடுவார். மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலையும் வரும் செப். 29-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.