பொள்ளாச்சி: வால்பாறை மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள குவிக்கண்ணாடிகளை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து வால்பாறையை சேர்ந்த கருப்புசாமி என்ற வாசகர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி பதிவில் கூறியிருப்பதாவது: வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
ஆழியாறு கவியருவியில் தொடங்கும் மலைப் பாதையில், வால்பாறை செல்லும் வழியில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் தடுக்க 48 இடங்களில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் குவிக் கண்ணாடிகள் பொருத்தப் பட்டுள்ளன.
இதனால் வளைவுகளில் எதிரே வரும் வாகனங்களை குவிக் கண்ணாடி மூலம் கண்டு அவற்றுக்கு வழிவிடுவதால், மலைப் பாதையில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வளைவுகளில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க ஓட்டுநர்களுக்கு குவிக்கண்ணாடி பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் குவிக் கண்ணாடியை சேதப்படுத்தி உள்ளனர். குறிப்பாக 7-வது கொண்டைஊசி வளைவில் குவிக் கண்ணாடி அமைப்பை முற்றிலும் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
மலைப் பாதையில் கனரக வாகனங்கள் அனுபவமிக்க ஓட்டுநர்களால் இயக்கப்பட்டாலும், வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் முற்றிலும் பார்வையில் இருந்து மறைக்கப்படுவதால், குறுகியமலைப்பாதையின் ஓரத்துக்கு வாகனத்தை கொண்டு சென்று எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மலைப்பாதையின் சரிவில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளாவதை தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் வளைவுகளில் குவிக்கண்ணாடிகளை பொருத்தி உள்ளனர். அவற்றின் முக்கியத்துவம் தெரியாமல் குவிக் கண்ணாடிகளை சிலர் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர். அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.