தேனி: 12 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி மாவட்டத்துக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியிருக்கும் நிலையில், தேனியிலிருந்து ஒருநாள் சுற்றுலாப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை-போடி இடையே மீட்டர்கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணிகள் முடிந்து, சென்னையிலிருந்து விரைவு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தேனி வரை முன்பே நிறைவுபெற்றதால் மதுரை-தேனிக்கு கடந்த ஓராண்டாக தினசரி ரயில் இயக்கப்படுகிறது. இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேனி ரயில் நிலையம் சுற்றுலாப் பயணிகளால் சுறுசுறுப்படைந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் பல்வேறு இயற்கை சார்ந்த சுற்றுலாத்தலங்கள், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளதால் இதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. இங்கு வைகை அணை, மேகமலை, கும்பக்கரை அருவி, ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகம், சுருளி அருவி, கொழுக்குமலை, சோத்துப்பாறை அணை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களும், வீரபாண்டி கவுமாரி யம்மன், குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர், தேவதானபட்டி காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களும் உள்ளன.
இவை தவிர ஏராளமான சிற்றருவிகளும், தடுப்பணைகளுமாக பசுமை சூழ்ந்து காணப்படுவதாலும், திராட்சைத் தோட்டங்கள், மாந்தோப்புகள் என தனிச்சிறப்பான விவசாய பூமியாகவும் விளங்குவதாலும் தேனி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தேனிக்கு ரயில் மூலம் வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கிருந்து ஒவ்வொரு இடமாகச் சென்றுவர காலதாமதம் ஏற்படுவதால், அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு சுற்றுலாப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறியதாவது: தேனி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக அரசுப் பேருந்துகளுடன், தனியார் சுற்றுலா வாகனங்களும் ஒருநாள் சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்தலாம். தொகுப்பு (பேக்கேஜ்) முறையில்சுற்றுலா பகுதிகளையும், ஆன்மிக தலங்களையும் சுற்றிக் காண்பிக்கலாம். தற்போது தினசரி பயணிகள் ரயில் மட்டுமல்லாது, சென்னையில் இருந்து வாரம் மும்முறை ரயிலும் இயங்கத் தொடங்கியுள்ளது.
போடி வரை அகலப்பாதை திட்டம் முழுமையடைந்து விட்டதால், கூடுதல் ரயில்கள் இயக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்தினால் சுற்றுலாப் பயணிகளால் தேனி மாவட்டத்தில் உள்ள உணவகம், தங்கும் விடுதி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் வளர்ச்சி அடையும், என்று கூறினர்.
இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போதுதான் ரயில் இயக்கம் சீராகி உள்ளது. இனி அரசு போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து சிறப்பு சுற்றுலா வாகனங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளோம், என்றனர்.