கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நித்ய கஜ பூஜைக்காக நிரந்தர யானை கொண்டு வரப்பட்டது. பொது தீட்சிதர்கள் யானையை கும்ப மரியாதையுடன் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நிரந்தமான யானை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மதுரையிலிருந்து, சி.ஏ.நடராஜர் குடும்பத்தினர் நிரந்தரமாக கோயிலுக்கு யானையை வழங்கினர். இன்று(செப்.17) இந்த யானை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கிழக்கு கோபுர வாயிலில் கோவில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் யானைக்கு கும்ப மரியாதை அளித்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீமந் நடராஜபெருமான் வீற்றுள்ள சித்சபை முன்பு பொதுதீட்சிதர்கள் சார்பில் யானைக்கு கஜபூஜை நடைபெற்றது. யானைக்கு சிவகாம லட்சுமி என பெயரிடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்டளைதாரர் பாலதண்டாயுத தீட்சிதர், பட்டு தீட்சிதர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.