புதுடெல்லி: சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மிரட்டல் விடுத்துள்ளர்.
ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், “நமது முன்னோர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து பாதுகாத்த சனாதன தர்மத்தை, சிலர் ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்கள். இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும்; கண்கள் தோண்டப்படும். சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசிவிட்டு இனி ஒருவரும் இந்த நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சனாதன தர்மத்துக்கு எதிராக திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி பேசியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.பி சாத்வி பிரக்யா, “சனாதன தர்மத்தை ஒழிக்கும் வலிமை யாருக்கும் கிடையாது. சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின், நடிகர் பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவதால் அவர்கள் கதாநாயகர்களாக ஆக முடியாது; வில்லன்களாகத்தான் ஆவார்கள். உண்மையில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியாதவர்கள் அவர்கள். தொழுநோய், மலேரியா, டெங்கு, எய்ட்ஸ் போன்ற நோய்களுடன் சனாதன தர்மத்தை ஒப்பிட்டவர்கள் இந்த நோய்களின் துன்பத்தை அனுபவிக்க வேண்டும். கடவுளிடம் இதையே நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் விமர்சனம்: இதனிடையே, அன்பு என்ற பெயரில் இண்டியா கூட்டணி வெறுப்பை விற்பதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இண்டியா கூட்டணியின் கூட்டம் மும்பையில் நடந்து முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். அவருக்கு ஆதரவாகவும் சனாதன தர்மத்துக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே பேசுகிறார். சனாதன தர்மத்துக்கு எதிராக இண்டியா கூட்டணி உருவாகி இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் இது.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து இண்டியா கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும், சோனியா மற்றும் ராகுலும் தங்கள் கருத்தை தெளிவுபடுத்த வேண்டும். எந்த ஒரு மதத்தைப் பற்றியும் ஆட்சேபனைக்குரிய அறிக்கைகளை வெளியிட அரசியலமைப்பில் உரிமை உள்ளதா என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்? அல்லது அரசியலமைப்பின் விதிகள் பற்றி இண்டியா கூட்டணிக்குத் தெரியாதா?
சனாதன தர்மத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்கள் கடைகளில் அன்பு என்ற பெயரில் வெறுப்பை ஏன் விற்கிறார்கள்? இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இயங்கும் வெறுப்பு மெகா மால் அது. மக்களைப் பிரித்து ஆள்வதுதான் அதன் நோக்கம்” என விமர்சித்துள்ளார்.
பின்னணி: சென்னையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்” என தெரிவித்திருந்தார்.