
சான் பிரான்சிஸ்கோ: இந்தியா சார்பில் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. தற்போது பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் உலா வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வை டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள்.
டெக்னாலஜி உலகின் சாம்ராட்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது கூகுள். இந்நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் சந்திரயான்-3 மிஷனை சிறப்பிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள். இது ஜிஃப் (GIF) வடிவத்தில் இயங்குகிறது. அதில் கண்களை மூடிக் கொண்டு இருக்கும் நிலவை சுற்றி சந்திரயான் வலம் வருகிறது. தொடர்ந்து லேண்டர் அதில் தரையிறங்கி, அதிலிருந்து ரோவர் பிரிவது போல இந்த டூடுல் ஜிஃப் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு கூகுள் டூடுல் பக்கத்தில் சந்திரயான்-3 மிஷனின் முழுப் பின்னணி தகவலும் இணைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 14-ம் தேதி பூமியில் இருந்து புறப்பட்டு நேற்று (ஆக.23) நிலவில் தரையிறங்கி, இஸ்ரோவுக்கு செய்தி அனுப்பியது வரை அனைத்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.