கோவை: கோவை மாவட்டத்தில் செயல்படும் பெரும்பாலான நுகர்வோர் அமைப்புகள் பெயரளவுக்கு மட்டும் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. நுகர்வோர் அமைப்பினர் ஒருவர் மீது ஒருவர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வருவது இதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கோவை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பட்டியல் பராமரிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் மாவட்டத்தில் உள்ள 20 நுகர்வோர் அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. நுகர்வோரின் தேவைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது, பாதிக்கப்படும் நுகர்வோருக்காக குரல் கொடுப்பது, நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவை நுகர்வோர் அமைப்புகளின் பணியாகும்.
ஆனால், பெரும்பாலான அமைப்புகள் பெயரளவுக்கு மட்டும் செயல்படுவதாகவும், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு கூட சரியாக வருவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளிக்கும் சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் லோகு கூறியதாவது: பொது மக்களின் குறைகள், ஆலோசனைகள், புகார் உள்ளிட்டவற்றை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணும் வகையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் செயல்பட வேண்டும் என தமிழக அரசு கடந்த 2004-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இக்கூட்டங்களில் கூட அதிகபட்சமாக 10 அமைப்பினர் மட்டுமே பங்கேற்கின்றனர். மீதமுள்ள 10 நுகர்வோர் அமைப்பினர் பங்கேற்பதில்லை. தங்கள் வீட்டின் கொசுத் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகளை எல்லாம் கூட்டத்தில் தெரிவிக்கின்றனர். கவுன்சில், போரம், மன்றம் என்ற பெயர்களை பயன்படுத்தக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவையில் உள்ள சில நுகர்வோர் அமைப்புகள் அரசு துறை கூட்டங்களில் கலந்துகொண்டு கோரிக்கை ஏதும் வைக்காமல் அதிகாரிகளுடன் செல்ஃபி எடுப்பது, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது, மற்றவர்களின் பேச்சுகளை குறிப்பெடுப்பது உள்ளிட்ட செயல்களில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
சிலர், நுகர்வோர் அமைப்புகளின் பொறுப்புகளில் உள்ளதாக கூறி பல அரசு துறைகளில் கமிட்டியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். சில அமைப்புகள் தடை செய்யப்பட்ட கவுன்சில்,மன்றம் உள்ளிட்ட பெயர்களை வைத்துக்கொண்டு அரசுத்துறை கூட்டத்தில் கலந்து கொண்டு கையொப்பமிட்டு வருகின்றனர்.
நுகர்வோர் அமைப்பு தொடங்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு முற்றிலும் மாறாக சில அமைப்புகள் செயல்படுகின்றன. இதனால் கோவை மாவட்டத்தில் உண்மையாக செயல்படும் சில நுகர்வோர் அமைப்பினரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நுகர்வோர் அமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். முறைகேடுகள் இருப்பின் அவ்வமைப்புகளை பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது,‘‘கோவை மாவட்ட நிர்வாகத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ள நுகர்வோர் அமைப்புகள் மீது அரசுத்துறை நிர்வாகங்களிடம் இருந்து புகார்கள் பெறப்படவில்லை. ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி புகார் தெரிவித்து வருகின்றனர்’’ என்றனர்.
மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி கூறும்போது, ‘‘நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை நுகர்வோர் அமைப்பினர் மேற்கொள்ள வேண்டும் என தெளிவாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு உள்ள பொறுப்புணர்வை உணர்ந்து நுகர்வோர் அமைப்பினர் செயல்பட வேண்டும்’’ என்றார்.