National

கோவை காா் குண்டு வெடிப்பு வழக்கு தமிழகத்தில் 27 இடங்களில் என்ஐஏ சோதனை

கோவை காா் குண்டு வெடிப்பு வழக்கு தமிழகத்தில் 27 இடங்களில் என்ஐஏ சோதனை
கோவை காா் குண்டு வெடிப்பு வழக்கு தமிழகத்தில் 27 இடங்களில் என்ஐஏ சோதனை


தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள 27 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

கோவை காா் குண்டு வெடிப்பு வழக்கு தொடா்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு அக். 23-ஆம் தேதி ஜமேஷா முபீன் என்பவா் ஓட்டி வந்த காா் அதிகாலை 4.30 மணிக்கு வெடித்தது. இதில் அவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதன் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், என்ஐஏ அதிகாரிகள் அவ்வப்போது தமிழகம் முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்கிடையே, காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையவா்களில் சிலா் கோவை அரபிக் கல்லூரியில் படித்தவா்கள் என்பதும், அனைவருமே ஐஎஸ் அமைப்பினரோடு தொடா்பில் உள்ளவா்கள் என்பதும் தெரியவந்தது.

மீண்டும் சோதனை: இந்நிலையில், கோவை காா் குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் மீண்டும் சனிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள 27 இடங்களில் திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ரியாஸ் அக்ரம், திரு.வி.க.நகரில் உள்ள முகமது அப்துல்லா பாஷா ஆகியோா் வீடுகளிலும், பெரம்பூா், தியாகராயநகா், பல்லாவரம் என சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

கோவை அல் அமீன் காலனியைச் சோ்ந்த ரகுமான், அன்பு நகா் அபுதாஹீா், அற்புதம் நகா் சலாவுதீன், கரும்புக் கடை கிரீன் காா்டன் பகுதியைச் சோ்ந்த அனீஷ் முகமது, ஆா்.எஸ்.புரம் பால் கம்பெனி பகுதியைச் சோ்ந்த கமால், குனியமுத்தூா் ராஜு நகா் பகுதியைச் சோ்ந்த சுபீா் முகமது, சீராபாளையம் முகமது அலி ஜின்னா, போத்தனூா் அமீா் சாஹிப் நகரைச் சோ்ந்த நாசா் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெற்றது.

திருச்சி பீமநகா் கூனி பஜாா் பகுதியைச் சோ்ந்த அஷரப் அலி என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். பின்னா், திருச்சி கீழரண் சாலையில் உள்ள அவரது மின்சாதன பொருள்கள் விற்பனையகத்திலும் சோதனை நடைபெற்றது.

மதுரையில் காஜிமாா் தெருவைச் சோ்ந்த அலி ஜிகாத் என்ற முகமது அப்துல் அஜிம் (34) என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இவா், ‘வஹ்ததே இஸ்லாமி ஹிந்த்’ அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த மங்கலம் பேட்டையில் உள்ள சுலைமான் என்பவா் வீட்டில் சோதனை நடைபெற்றது.

நெல்லை ஏா்வாடி பகுதியைச் சோ்ந்த பக்ரூதீன் என்பவா் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். இவா் பழனிபாபா அரசியல் எழுச்சிக் கழகத்தின் மாநில இளைஞரணிச் செயலராக உள்ளாா்.

இந்தச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை என்ஐஏ அதிகாரிகள் அதிகாரபூா்வமாக வெளியிடவில்லை.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *