கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் 16 வயது மாணவி ஒருவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலையால் இறந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐஐடி – ஜேஇஇ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து தனியார் கோச்சிங் மையங்களில் தங்கிப் படிப்பதுண்டு.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு தயாராகிவந்த 16 வயது மாணவி ஒருவர் தற்கொலையால் இறந்தார். இந்த மாணவி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர். 2023 தொடங்கியதிலிருந்து இது 25வது தற்கொலை சம்பவமாகும். கடந்த 2022-ல் கோட்டாவில் 15 மாணவர்களும், 2019-ல் 18, 2018-ல் 20, 2017-ல் 7, 2016-ல் 17 மற்றும் 2015-ல் 18 என ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு அழுத்தங்களால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதில் 2023-ல் தான் இதுவரை இல்லாத அளவு 25 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
ஸ்பிரிங் மின்விசிறிகள்: இதனிடையே, தற்கொலையை தடுக்கும் வகையில் கல்லூரி விடுதிகளில் ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகள் பொருத்தப்பட கோட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த விதிகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.