கொடைக்கானல்: கொடைக்கானலில் 12 மைல் சுற்றுச் சாலையில் உள்ள சுற்றுலா இடங்ளுக்கு செல்லும் வாகனங்களுக்கு வனத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொடைக்கானலில் 12 மைல் சுற்றுச் சாலையில் குணா குகை, மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், இன்று (ஆக.18) முதல் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, வனப்பகுதிக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று (ஆர்.சி.), காப்பீடு சான்றிதழ், மாசு சான்றிதழ் ஆகிய 4 சான்றிதழ்கள் கட்டாயம். இந்த சான்றிதழ்கள் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
முன்பு வாகன நுழைவு கட்டணம் மற்றும் சுற்றுலா இடங்களுக்கான டிக்கெட் அந்தந்த சுற்றுலா இடங்களில் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் இக்கட்டண ரசீதுகள் அனைத்தும் மோயர் சதுக்கத்தில் வைத்து விநியோகிக்கப்படும். பேரிஜம் ஏரிப் பகுதிக்குச் செல்ல நாளொன்றுக்கு 50 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்படும் என கொடைக்கானல் வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா தெரிவித்தார்.