புதுடெல்லி: கொங்கு மண்டலப் பகுதிக்காக பல்வேறு தடங்களில் ரயில் வசதிகள் கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக, பாஜகவின் மகளிர் அணிப் பிரிவின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான வானதி, தனது மனுவில் குறிப்பிட்ட முக்கிய சாரம்சம் பின்வருமாறு: கோவை – திருவனந்தபுரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். இதற்காக பொதுமக்களிடம் இருந்து மிக அதிகமாக கோரிக்கைகள் எழுந்துள்ளன. கோவை – பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் அதிகாலை 5 மணிக்கு புறப்படுவது பயணிகளுக்கு உகந்ததாக இல்லை. எனவே, கோவையிலிருந்து காலை 6 மணிக்குப் பிறகு புறப்புடும் வகையில் பயண நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். இதன்மூலம், கோவை மேற்குப்பகுதி வாசிகள், கேரளாவுடன் இணைந்திருக்க வசதியாக இருக்கும். இந்த இணைப்பு பட்டியலில் கேரளாவின் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், மற்றும் பாலக்காடு ஆகிய நகரங்கள் இடம் பெறுகின்றன.
மேலும், எட்டு வரிசைகள் கொண்ட புதிய வந்தே பாரத் ரயிலால், தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இடையிலான சுற்றுலாத் தடமும் பெருகும். தற்போது கோவை – திருவனந்தபுரத்திற்கு இடையே அன்றாடம் பல அரசு பேருந்துகளுடன் 82 தனியார் ஆம்னி பேருந்துகளும் சென்று வருகின்றன.
இதன் பயணிகளை மத்திய ரயில்வே துறையின் வந்தே பாரத் தன்பக்கம் கவரும் வாய்ப்புகளும் உள்ளன. கோவை – பெங்களூரு தடத்தில் கடந்த ஜனவரி 1 முதல் வந்தே பாரத் இயக்கப்பட்டது.
இதற்காக, மேற்குப்பகுதி வாசிகள் மத்திய அரசிற்கு தம் நன்றிகளை தெரிவிக்கின்றனர். எனினும், இந்த ரயில் கோவையிலிருந்து புறப்படும் நேரம் 5.00 மணி என்பதை ஒரு மணி நேரம் தாமதாக 6.00 மணி என மாற்ற வேண்டும். ஏனெனில், இந்த விடியல் நேரத்தில் வந்தே பாரத்தை பிடிப்பது அதன் பயணிகளுக்கு சிரமாக உள்ளது. இந்த ரயிலின் பயணமானது, மொத்தம் 6 மணி நேரமாக உள்ளது. ஆனால், இதற்கான ரயில்வே அட்டவணையில் 6 மணி 30 நிமிடங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால், ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சென்று வந்து கொண்டிருந்த ஐந்து ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். இவை 2009-ல் சுமார் 13 வருடங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன. எனத் தெரிவித்துள்ளார். பாஜக-வின் முக்கிய பொறுப்பில் உள்ள வானதியின் கோரிக்கை மனுவை பொறுமையாக படித்துப் பார்த்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் உறுதி அளித்துள்ளார்.