சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு சட்டத்தை மதிக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இருந்து பெரியகுளம் செல்வதற்காக விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், அங்கு செய்தி யாளர்களிடம் பேசியதாவது: ”உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படியும் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு சொல்வது சட்டவிரோதம். காவேரி பிரச்சனையை தீர்க்க தான் காவிரி நடுவர் மன்றம் நிறுவப்பட்டது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன் பிறகு காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு போராடி பெற்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்த முடியாது என கர்நாடக அரசு சொன்னால், அது இந்திய அரசியல் சட்டத்தை மதிக்கவில்லை என்றே பொருள். முறையான சட்டப் போராட்டம் அல்லது பேச்சுவார்த்தை மூலமாக திமுக அரசு துரிதமாக செயல்பட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெற்று தந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை. சசிகலாவை இதுவரை சந்திக்கவில்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். புரட்சி பயணம் மீண்டும் தொடரும்.” இவ்வாறு ஒபிஎஸ் கூறினார்.