
சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் உடனடியாக திறந்துவிட உத்தரவிடக் கோரி, மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பி.க்கள் மனு அளிப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தண்ணீர்ப் பற்றாக்குறை ஆண்டில், அதற்கேற்ற விகிதாச்சார அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தண்ணீரைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதன்படி, நடப்பாண்டில் கடந்த 14-ம் தேதி வரை தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய 103.5 டிஎம்சி நீரில் 38.4 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளது. அதாவது, 65.1 டிஎம்சி குறைவாகக் கிடைத்துள்ளது.
தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்காததாலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாததாலும், தமிழக அரசு கடந்த ஆக. 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழகத்தின் கோரிக்கை நியாயமற்றது, தமிழகம் தனது சாகுபடிப் பரப்பை அதிகரித்துள்ளது என்று ஆதாரமற்ற அறிக்கைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், மத்திய ஜல் சக்தி அமைச்சருக்கு கர்நாடக அரசு சார்பில் கடந்த 13-ம் தேதி எழுதிய கடிதத்தில், தமிழகத்துக்கு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் போதுமான மழை கிடைக்கும் எனவும், காவிரி டெல்டா பகுதிகளில் தேவையான அளவு நிலத்தடி நீர் இருக்கிறது எனவும் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல் சக்தி அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளார்.
தமிழகத்துக்கு விநாடிக்கு 12,500 கனஅடி நீரை கர்நாடகம் வழங்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று, மத்திய ஜல் சக்தி அமைச்சர் ஆணையத்துக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவின்படி, தமிழகத்துக்கு உரிய நீரை, குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவுக்கு தக்க அறிவுரையை வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.