விருதுநகர்: கவுதம புத்தர் காலத்திலிருந்து சனாதன எதிர்ப்பு நீடித்து வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பொத்துமரத்து ஊரணிக் கரையில் ஆக்கிரமிப்பில் உள்ள குடியிருப்புகளை அகற்றும் பணி கடந்த இரு நாள்களாக நடைபெற்று வருகிறது. அக்குறிப்பிட்ட இடத்தில் வசித்து வந்த பொதுமக்கள் சிவகாசி மாநகராட்சிப் பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, மதுரையிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று பிற்பகல் சந்தித்துப் பேசினார். அப்போது, சிவகாசியில் ஆக்கிமிரப்பு அகற்றப்படும் இடத்தில் 3 தலைமுறைகளாக குடியிருந்து வந்த பொதுமக்களுக்கு அருகிலோ அல்லது மாநகராட்சிக்கு உட்ட பகுதியிலோ மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், சிவகாசி பொதுமரத்து ஊரணி கரையில் வசிப்போரின் குடியிருப்புகள் அகற்றப்படுகின்றன. இதுதொடர்பாக அப்பகுதி மக்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்தேன். அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்களை அப்புறப்படுத்துவது மிகுந்த துயரத்தைத் தருகிறது. தங்குவதற்கு இடமில்லாமல் அவர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் நிலை ஏற்படுகிறது.
பலரது குடும்பங்கள் இதனால் சிதறுகின்றன. மாவட்ட ஆட்சியர் நேரடியாக அப்பகுதி மக்களை சந்தித்து பார்வையிட வேண்டும். அவர்களுக்கு சிவகாசி மாநர எல்லைக்குள் இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். ஆக்கிமிரப்பு என்று கூறப்படும் இடத்தில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. பள்ளிகள், வாகன நிறுத்தமிடங்கள் உள்ளன. அவைகளை அகற்றாமல் ஏன் குடியிருப்புகளை அகற்றுகிறீர்கள் என கேள்வி எழுப்பினோம். 35 கி.மீட்டர் தூரத்தில் வழங்கப்படும் மாற்று இடம் எங்களுக்கு வேண்டாம் என மக்கள் வலியுறுத்தினர்.
மேலும், அருப்புக்கோட்டை அருகே உள்ள நார்த்தம்பட்டி மக்களுக்கு சுடுகாட்டு பாதை இல்லை. பாதை ஏற்படுத்திக்கொடுக்க வலியுறுத்தினோம். மேலும், மக்கள் பிரச்சினைகள் குறித்தும் வலியுறுத்தினோம். ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை குறித்து தேமுதிக பொருளார் பிரேமலதா ஒரு பெண் என்பதால் இத்திட்டத்தை வரவேற்று அவர் பாராட்டியிருக்க வேண்டும். இதை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என நான் கருதுகிறேன். பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவது பாராட்டுக்குரியது. இத்திட்டத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக பார்க்கிறோம். பெண்கள் மத்தியில் முதல்வருக்கு இத்திட்டம் செல்வாக்கை உயர்த்தும். இனி யாரும் இத்திட்டத்தை நிறுத்த முடியாது.
இண்டியா கூட்டணி உருவானதும் மோடி பதற்றத்தில் உள்ளார். மனதில் பட்டதையெல்லாம் பேசுகிறார். இக்கூட்டணியை சிதறடித்துவிட வேண்டும என கனவு காண்கிறார். சனாதனத்தை ஒழிப்போம் என்ற சனாதன எதிர்ப்பு போர்க் குரல் கவுதம புத்தர் காலத்திலிருந்து நீடித்து வருகிறது. இண்டியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மோடி இதை தேர்தல் யுக்தியாக கையாளுகிறார். இண்டியா கூட்டணி இதனால் பிளவுபட வாய்ப்பு இல்லை. இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் என்பது ஒரு பிரச்சினை இல்லை. பாஜகவை வீழ்த்துவதுதான் பிரச்சினை. பாஜக வீழ்த்தும் நிலை ஏற்படும், அதன்பின் இண்டியா கூட்டணி பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும். எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் ஆவின் பொருள்கள் அரசு ஆவண செய்ய வேண்டும். விலை உயர்வை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்” இவ்வாறு பேசினார்.
விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.