சென்னை: வீடுகளில் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும், அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ உறுதுணையாக இருப்பதற்காகவும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்படுவதாக காஞ்சிபுரத்தில் நடந்த தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 1.06 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் தொடக்க விழா, அண்ணா பிறந்தநாளான நேற்று, அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் நடந்தது. காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், 13 பெண்களுக்கு வங்கி ஏடிஎம்அட்டைகளை வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது: ‘மகளிர் உரிமை திட்டத்தை நிறைவேற்ற முடியாது. பொய் வாக்குறுதிகொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார்கள்’ என்று சிலர் கூறினர். ஆட்சிக்கு வந்த உடனேயே கொடுத்திருப்போம். ஆனால், நிதி நிலைமை சரியில்லை. அதனால்தான், நிதி நிலைமையை ஓரளவுக்கு சரிசெய்துவிட்டு இப்போது கொடுக்கிறோம்.
இத்திட்டம் 2 நோக்கங்களை கொண்டது. முதலாவது, பலனை எதிர்பாராமல் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம். அடுத்தது, ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கிடைக்கப்போகிறது. இது பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் பெண்கள் சுயமரியாதையோடு வாழ உறுதுணையாக இருக்கும்.
ஒரு ஆணின் வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, உடல்நலன் காக்கவும் உழைக்கும் பெண்களுக்கு ஊதியம் என்றால் எவ்வளவு கொடுப்பது. ஆனால் இப்படி கடுமையாக உழைப்பவர்களை ‘ஹவுஸ் ஒய்ஃப்’ என்று சாதாரணமாக கூறிவிடுவார்கள். பெண்கள் வீட்டில் பார்க்கும் வேலைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. மகளிருக்கான உரிமையை கொடுக்க வேண்டும், அவர்களது உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் இத்திட்டம்.
தாயின் கருணை, மனைவியின் உறுதுணை, மகளின் பேரன்பு இவை ஒருவருக்கு கிடைத்துவிட்டால், அதைவிட வேறு செல்வம் தேவையில்லை. கருணையே வடிவான தாய் தயாளு அம்மையார், தூணாக விளங்கும் மனைவி துர்கா, தன்னம்பிக்கை கொண்ட மகள் செந்தாமரை – இந்த மூன்றும் எனக்கு கிடைத்திருக்கிறது.
பெண்களுக்கான எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்து, அவர்களது முன்னேற்றத்துக்கு வழிவகை செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரது பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது பொருத்தமானது. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில், மகளிருக்காக விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நகைக்கடன் தள்ளுபடி, சுயஉதவி குழு சுழல்நிதி, கடனுதவிகள் என பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் அமைந்திருக்கிறது மகளிர் உரிமை திட்டம். இனி, 1.06 கோடி மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.
முதியோர், அமைப்புசாரா தொழிலாளர், ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதிய திட்டங்களில் பயன்பெறும் 39.14 லட்சம் பயனாளிகள் உட்பட மொத்தம் 1.45 கோடி குடும்பங்கள் தமிழக அரசின் மாத ஓய்வூதிய திட்டங்களால் பயன்பெறுகின்றனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.