சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ளதாக 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் தமிழக அரசின் மாபெரும் திட்டம் இது என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர், சிறு தவறுகூட நடந்துவிடாமல் மிகுந்த கவனத்துடன் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டத்தை, அண்ணா பிறந்தநாளையொட்டி வரும் 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.
இந்நிலையில், இத்திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தொடக்க விழா செப்.15-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. அன்றே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையில் விழா நடைபெறும்.
ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் தமிழக அரசின் மாபெரும் திட்டம் இது. ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இனிமேல் மாதாமாதம் ரூ.1,000 பெறப்போகின்றனர். அதிக நிதிஒதுக்கீடு தேவைப்படுகிற, அதிக பயனாளிகளை உள்ளடக்கிய திட்டமாக இது உள்ளது. இதை வெற்றிகரமாக செயல்படுத்தும் பொறுப்பும், கடமையும் அதிகாரிகளுக்கு இருக்கிறது.
ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுவதால் கிடைக்கும் பாராட்டு, ஒரு கோடி பாராட்டுக்கு சமம். அதே நேரம், சிறு தவறு நடந்துவிட்டால்கூட கெட்ட பெயர் வரும் என்பதை மறந்துவிட கூடாது. எனவே, எந்த இடத்திலும், எந்த சூழலிலும், எந்த ஒரு தனிநபருக்கும் சிறு தவறுகூட நடந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தகுதியான பெண்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் செப்.15 முதல் ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். தகுதியான அனைவருக்கும் மாதம்தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்.
ஏடிஎம் கார்டுகள் முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக அனைவருக்கும் விரைவில் வழங்கப்பட வேண்டும். எனினும், ஏடிஎம் கார்டு வழங்க காத்திருக்காமல், அனைவருக்கும் உரிமைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணத்தைஎடுப்பதில் பயனாளிகளுக்கு எந்த சிக்கலும் ஏற்பட கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல, வரும் 15-ம் தேதி, என் சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள்இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண்ணும் சேர்க்கப்பட வேண்டும்.
மொத்தம் 1.63 கோடி விண்ணப்பம்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற 1.63 கோடி விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. இதில் தகுதி உள்ளவர்கள் என 1 கோடியே6 லட்சத்து 50 ஆயிரம் பேரை தேர்வு செய்துள்ளோம். மற்றவர்களின் கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை அவர்களுக்கு சொல்ல வேண்டும். அதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால், பெரும்பாலானோர் மனநிறைவு அடைவார்கள். சந்தேகம் இருப்பவர்கள் மறுபடியும் விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். அதன்மூலம் பொதுமக்களுக்கு அரசு மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும்.
மாவட்ட தலைநகரங்களில் இதற்கான விழா வரும் 15-ம் தேதி நடைபெறும். பணம் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக வருவார்கள். கிடைக்காத பெண்கள் யாராவது அங்கு வந்து கேட்டால், பதில் சொல்ல தனி அலுவலர்களை அமர்த்தி, ‘கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலிக்கிறோம்’ என்பதை சொல்லி அனுப்ப வேண்டும். இது மிகமிக முக்கியம். இதை செய்யாவிட்டால், எங்காவது ஓர் இடத்தில் பிரச்சினை என்றாலும்கூட, மாநிலம் முழுவதும் பெரிய செய்தியாகிவிடும். எனவே, இதில் கவனமாக இருக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள் இத்திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறு தலைமைச் செயலர் அறிவுறுத்த வேண்டும். அரசு – வங்கிகள் இடையிலும், வங்கிகள் – பொதுமக்கள் இடையிலும் சீரான தொடர்பு உள்ளதா என்று மாதம்தோறும் முதல் வாரத்தில் தனி கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்.
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், முதல்வரின் காலை உணவு, புதுமைப்பெண், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆகிய 5 திட்டங்களையும் திரும்ப திரும்பமக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும்.
எந்த ஒரு திட்டத்தையும் முறையாகசெயல்படுத்தினாலே, பயனடைந்தவர்கள் மிகப்பெரிய அளவுக்கு நம்மை பாராட்டி பேசுவார்கள். அத்கைய பாராட்டுகளை மட்டுமே பெற்றுத் தரும் திட்டமாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலர்சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலர் மற்றும் வளர்ச்சி ஆணையர் நா.முருகானந்தம், நிதித் துறை செயலர் உதயச்சந்திரன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் தாரேஸ் அகமது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.