பெங்களூரு / புதுடெல்லி: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரிக்க நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய தனி அமர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ‘‘உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதி உத்தரவின்படி தமிழகத்துக்கு உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியது. அதற்கு கர்நாடக அரசு, ‘‘அணைகளில் குறைந்த அளவிலேயே நீர் இருப்பதால், தண்ணீர் திறக்க இயலாது” என பதில் மனு தாக்கல் செய்தது.
இதனிடையே கடந்த மாதம் 29-ல் கூடிய காவிரி மேலாண்மைஆணையக் கூட்டத்தில், ‘‘அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும்” என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து கடந்த 13-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா அவசரமாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மத்திய ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து விளக்கினார்.
அப்போது டி.கே.சிவகுமார், ‘‘இந்த விவகாரத்தில் கர்நாடகாவின் உண்மை நிலையை அறிய காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அணைகளை பார்வையிட வர வேண்டும்” என்றார்.
தமிழக அரசின் அவசர மனு வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் வாயிலாகவே நீர் பங்கீட்டு விவகாரத்தை தீர்த்துக்கொள்ள கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கின் உத்தரவுப்படி செப்.18-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெறும் அதன்தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்தார். இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தருக்கு, கர்நாடக அணை களில் நீர் இருப்பு விவரம், தண்ணீர் திறந்துவிட இயலாத நிலை குறித்து கர்நாடக அரசின் நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் கடிதம் எழுதியுள்ளார்.