Tour

கன்னியாகுமரி படகு தளத்தில் மேற்கூரை இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி | Boating issue in kanyakumari

கன்னியாகுமரி படகு தளத்தில் மேற்கூரை இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி | Boating issue in kanyakumari
கன்னியாகுமரி படகு தளத்தில் மேற்கூரை இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி | Boating issue in kanyakumari


நாகர்கோவில்: கன்னியாகுமரி படகு தளத்தில் மேற்கூரை இல்லாததால் தகிக்கும் வெயில், கொட்டும் மழை போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் வெகுநேரம் நின்று அவதியடைகின்றனர். கன்னியாகுமரியில் கடலுக்குள் இருக்கும் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் படகு போக்குவரத்து முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய படகுகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.

சமீபத்தில் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலுக்குள் சென்று திரும்பும் வகையில் திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரு சொகுசு படகுகள் இயக்கப்பட்டன. இதுவும் சுற்றுலா பயணிகளைக் வெகுவாக கவர்ந்தது. தற்போது கூட்டம் குறைவாக இருப்பதாகக் கூறி வட்டக்கோட்டை படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

விவேகானந்தர் பாறைக்கு காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான நாட்களில் 2 மணி நேரம் வரை தாமதமாக தொடங்கப்படுகிறது. இதனால் சுற்றுலாபயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து இந்து தமிழ் திசையின் உங்கள் குரல் சேவையில், சுசீந்திரத்தை சேர்ந்த பொதுநல ஆர்வலர் சிவா தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வு உட்பட பல காரணங்களைக் காட்டி காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு சேவை பெரும்பாலும் 3 மணி நேரம் தாமதமாக 11 மணிக்கே தொடங்குகிறது.

படகுகள் நிற்கும் படகு தளத்தில் குவியும் மணலை அகற்றாமல் காலம் கடத்தப்படுகிறது. மணல் திட்டுக்களை அகற்றினாலும், மீண்டும் கடலுக்குள்ளேயே மற்றொரு பகுதியில் கொட்டுகின்றனர். இதனால் 3 தினங்களுக்குள் மீண்டும் படகு தளத்தில் மணல் திட்டுக்கள் உருவாகின்றன.

இதுபோன்ற பிரச்சினையால் படகு தரைதட்டி நின்று படகு சேவை பாதிக்கிறது. அப்போதும் கடல் நீர்மட்டம் தாழ்ந்துவிட்டது என்றே அறிவிக்கின்றனர். இதனால் ஓராண்டில் 200 நாட்கள் கூட படகு சேவை முறையாக நடைபெறுவதில்லை. படகுதள சீரமைப்பு பணி, விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இணைப்பு பாலம் என திட்டங்கள் மேற்கொண்டாலும் அவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நிற்பதற்கு இதுவரை மேற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால் தகிக்கும் வெயில் அல்லது கொட்டும் மழையில் மக்கள் அவதியடைகின்றனர்.

ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாயை ஈட்டிக் கொடுத்தாலும் அதன் சிறு பகுதியைக் கூட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சுற்றுலா மேம்பாட்டுக்கு பயன்படுத்துவதில்லை. கடந்த மே 24-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு தொடங்கிய திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரு சொகுசு படகுகளிலும் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேல் சுற்றுலா பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

ஆனால் இவை பாதி நாட்களுக்கு மேல் இயங்காமல் படகு தளத்திலேயே நிற்கின்றன. 100 பேருக்கு மேல் இருந்தால் மட்டுமே இயக்கும் நிலையில் இந்த சொகுசு படகு உள்ளது.

இந்த படகு தொய்வின்றி இயங்க வட்டக்கோட்டையிலும் படகு தளம் ஏற்படுத்த வேண்டும். அங்கும் சுற்றுலா பயணிகளை ஏற்றி, இறக்கி வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மொத்தத்தில் கன்னியாகுமரியின் முக்கியத்துவம் வாய்ந்த படகு சேவை கடந்த ஓராண்டாக தள்ளாட்டம் போடுகிறது. படகு போக்குவரத்து தொய்வின்றி நடைபெற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக உயரதிகாரிகள் முறையான ஏற்பாடுகளையும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *