கள்ளக்குறிச்சி: 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராம குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு, மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன்) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் கீழ் உள்ளூர் நிலையில் நீரின் ஒருங்கிணைக்கப்பட்ட தேவை மற்றும் விநியோக மேலாண்மையின் மீது கவனம் செலுத்துதல், நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் வீட்டுக் கழிவு நீர் மேலாண்மை, நிலத்தடி நீரை அதிகரித்தல் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற உள்ளூர் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் போன்றவை ஜல் ஜீவன் திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டிலும் ஜல் ஜீவன் திட்டம் மற்றும் அத்திட்டத்தின் நீட்சியாக 15-வது மானிய நிதிக் குழு மூலம் கிராமப்புற குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.