மாஸ்கோ: இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலத்துக்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று சொல்லப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. நாளை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் இதுதொடர்பாக, “லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப்பாதையில் செலுத்தும் வேலையில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. இந்த செயல்பாட்டின்போது தானியங்கு நிலையத்தில் அசாதாரண சூழல் எழுந்ததால், திட்டமிட்டப்படி அந்த செயல்முறையை மேற்கொள்ள முடியவில்லை. எனினும் விஞ்ஞானிகள் நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர்” என்று கூறியுள்ளது. மேலும், கூடுதல் விவரங்களை ரோஸ்காஸ்மோஸ் அளிக்கவில்லை.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இது வரும் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் விண்வெளி முகமையான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. கடந்த 1976-ம் ஆண்டு ரஷ்யாவை உள்ளடக்கிய சோவியத் யூனியன் சார்பில் நிலவுக்கு விண்கலம் அனுப்பப்பட்டது. அதன் பிறகு 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.
லூனா-25 விண்கலம் வரும் 16-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு நிலவின் சுற்று வட்டப்பாதையை சுற்றி வரும் லூனா-25, வரும் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் சந்திரயான் விண்கலத்துக்கு முன்னதாகவே தரையிறங்கும் என கூறப்படுகிறது.