ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆற்றாங்கரை ஊராட்சி சங்க காலத்தில் புகழ்பெற்ற துறைமுகமாகவும் வணிகத் தலமாக திகழ்ந்தது.
ஆற்றாங்கரை ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1986-87, 1990-91, 1993-94, 1995-96, 1996-97, 1997-98, 2014-2015 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன.
இதில், பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய ஆபரணப் பொருட்களான சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், கண்ணாடியிலான மணிகள், விளையாட்டுப் பொருட்கள், இரும்பில் செய்யப்பட்ட பொருட்கள், நாணயங்கள், மத்திய தரைக்கடல் நாடுகளோடு கொண்டிருந்த வாணிபத் தொடர்புகளை வெளிப்படுத்தும் அரிய மண்பாண்டங்கள், நாணயங்கள், தமிழ் பிராமி எழுத்து பொறித்த மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வைகையின் முகத்துவாரம்: மேற்கு தொடர்ச்சி மலை வருசநாடு மலைப் பகுதியில் உருவாகும் வைகை ஆறு மதுரையை கடந்து 258 கி.மீ. தூரம் பயணம் செய்து ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கலக்கிறது. பின்னர் அங்கிருந்து முகத்துவாரமான ஆற்றாங்கரை ஊராட்சியில் பாக் நீரிணை கடலில் கலக்கிறது. வைகையில் அதிக அளவில் தண்ணீர் வந்தால்தான் இந்த முகத்து வாரம் வழியாக தண்ணீர் கடலில் கலக்கும். கடைசியாக கடந்த 2021 டிசம்பரில் ஆற்றாங்கரை முகத்துவாரம் வழியாக வைகை ஆற்று தண்ணீர் கடலில் கலந்தது.
மணல் மேவிய முகத்துவாரம்: வைகை ஆற்றிலிருந்து வரக் கூடிய தண்ணீர் கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் அவ்வப்போது மணல் மேடு உருவாவதால் ஆற்றுப் பகுதியிலிருந்து கடல் பகுதிக்கு படகுகள் செல்ல தடை ஏற்படுகிறது. முகத்துவாரத்தின் கிழக்கு பகுதியை ஆழப்படுத்தி, மணல் மேவாமல் இருக்க கற்களை கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு பகுதியிலும் ஆழப்படுத்தி தடுப்பு கற்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் கூறியதாவது: கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஆற்றாங்கரை முகத்துவாரத்தை ஆய்வு செய்தேன். மீன்வளத் துறை மற்றும் கீழ் வைகை வடிநிலக் கோட்டம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.