சென்னை: ககன்யான் திட்டத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள வியோமித்ரா ரோபோவை மதிப்பிடுவது சவாலான பணி என இஸ்ரோ முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னையை தலைமையக மாகக் கொண்டு செயல்படுகிறது நேஷனல் இன்ஸ்டிட்யூஷன் ஃபார் குவாலிட்டி அண்ட் ரிலையபிலிட்டி (NIQR). இந்த அமைப்பின் சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் கடந்த 15 மற்றும் 16 தேதிகளில் 17-வது சர்வதேச மாநாடு நடை பெற்றது. ‘உலகளாவிய சிறப்பை நோக்கி – இந்தியாவின் எழுச்சி’ என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இதில், இஸ்ரோவின் ஐஐஎஸ்யு முன்னாள் இயக்குநர் டி.சாம் தயாள தேவ் பேசியதாவது:
மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சோதனை முயற்சியாக ககன்யான் விண்கலத்தில் முதலில் மனித ரோபோவை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ இனெர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட் (ஐஐஎஸ்யு) வியோமித்ரா என்ற ரோபோவை உருவாக்கி உள்ளது. இதை அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அனுப்ப திட்ட மிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப உதவியுடன் பெண் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மனித ரோபோ, விண்வெளி விஞ்ஞானியைப் போலவே செயல்படும். பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்தபடி பேசும், பார்க்கும், பதில் அளிக்கும் திறன் வாய்ந்தது.
எனினும், இந்த ரோபோவை விண்வெளிக்கு அனுப்பும் முன்பு பூமியில் மதிப்பீடு செய்வது என்பது தரக்கட்டுப்பாட்டு மற்றும் வடிவமைப்பு ஊழியர்களுக்கு மிகவும் சவாலான பணியாக உள்ளது. அந்தப் பணியில் ஈடு பட்டு வருகிறோம்.
வியோமித்ராவுக்கு வாழ்த்து கள். அது விண்வெளிக்கு வெற்றி கரமாக பறந்தவுடன், அதை இந்தியாவின் பிரதிநிதியாக நிலவில் இறக்கி ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். விண்வெளித் திட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தொழில் துறையின் பங்கு மற்றும் தரக் கட்டுப்பாட்டு பணியாளர்களின் அறிவு முக்கியம். அதனால்தான் திருவனந்தபுரத்தில் எங்கள் நடவடிக்கையின் ஒரு பகுதியாக என்.ஐ.க்யூ.ஆர். இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.