ஓசூர்: ஓசூரில் ஒரே இருசக்கர வாகனத்தில் 5 சிறுவர்கள் சென்றதால் வாகனத்தின் உரிமையாளருக்கு போலீஸார் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர் பகுதியிலும், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் இளைஞர்கள் போக்குவரத்துக்கு இடையூராகவும், பாதுகாப்பு இல்லாமலும் இருசக்கர வாகனங்களில் அடிக்கடி சாகசம் செய்து வருகின்றனர். இது போன்று செயல்களில் ஈடுப்படுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஎஸ்பி பாபுபிரசாத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
டிஎஸ்பி உத்திரவின் பேரில், இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வதை தடுக்க போலீஸார் கண்கணித்து வருகின்றனர். இந்நிலையில் ஓசூர் ராமநாயக்கன் ஏரிசாலையில் ஒரு இருசக்கர வாகனத்தில் 5 சிறுவர்கள் ஆபத்தை உணராமல் சென்றனர். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து காவல்துறைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் விசாரணை செய்ததில், சிறுவர்களில் ஒருவரின் தந்தையின் இருசக்ர வாகனம் என தெரிய வந்தது. பின்னர் போலீஸார் வாகன உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, 3 ஆண்டுகளுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாகனத்தின் பதிவு சான்றை ஒருவருடத்திற்கு ரத்து செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் 5 சிறுவர்களுக்கும் 25 வயது பூர்த்தியாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது என வட்டார போக்குவரத்துக்கு பரிந்துரை செய்தனர். இது போன்று உயிருக்கு ஆபத்தாகவும், பாதுகாப்பு இல்லாமலும் அலட்சியமாக வாகனத்தை ஓட்டி செல்பவர்களை வாகனத்தின் பதிவு எண் தெரியும் வகையில் புகைப்படம் எடுத்து காவல்துறைக்கு 6383291232 எண்ணிற்கு அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓசூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.