
துபாய்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில் பாகிஸ்தான் அணி முதலிடத்தை இழந்தது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் இடத்தை இழந்து 115 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
அந்த அணி தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்ததை தொடர்ந்து தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளது. அதேவேளையில் இந்திய அணி ஓர் இடம் முன்னேறி 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த தரவரிசையில் அடுத்த சில நாட்களில் மாற்றங்கள் இருக்கக்கூடும். ஏனெனில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. அதேவேளையில் இந்திய அணி நாளை (17ம் தேதி) ஆசிய கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இலங்கையுடன் மோத உள்ளது. – பிடிஐ