
கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டுள்ள இளம் இந்திய வீரர் திலக் வர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கான கேப்பை (தொப்பி) கேப்டன் ரோகித் சர்மா வழங்கியிருந்தார்.
20 வயதான திலக் வர்மா, கடந்த மாதம் நிறைவடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தி இருந்தார். இடது கை பேட்ஸ்மேனான அவரை உலகக் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் சொல்லி வந்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார். அயர்லாந்து தொடரிலும் இடம்பெற்றிருந்தார்.
இந்தச் சூழலில் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் அவர் இடம்பெற்றார். இந்தத் தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், சூப்பர்-4 சுற்றின் கடைசிப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.
இந்திய அணிக்காக 7 டி20 போட்டிகளில் திலக் வர்மா விளையாடி உள்ளார். மொத்தமாக 174 ரன்கள் எடுத்துள்ளார். 30+ ரன்கள் இரண்டு முறையும், ஒரு அரைசதமும் பதிவு செய்துள்ளார். எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.