துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராமுதலிடம் சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வீழ்த்திய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை 30 வயதான ஜஸ்பிரீத் பும்ரா படைத்துள்ளார்.
ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றும் 4-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் பும்ரா. இதற்கு முன்னர் அந்த இடத்தை ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன் சிங் பேடி ஆகியோரும் அலங்கரித்துள்ளனர்.
விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் பும்ராவின் அபாரமான பந்து வீச்சால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 என சமநிலையை எட்டியது. பும்ரா முதலிடத்துக்கு முன்னேறிய நிலையில் அந்த இடத்தில் கடந்த 11 மாதங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஜஸ்பிரீத் பும்ரா 881 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா 851 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறார்.
2 இடங்கள் பின்தங்கி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 841 புள்ளிகளைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் ஒரு இடம் பின்தங்கி 828 புள்ளிகளுடன் 4-வது இடம் வகிக்கிறது.
ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் (818), இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா (783), இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (780), ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் (746), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (746), இங்கிலாந்தின் ஆலி ராபின்சன் (746) ஆகியோர் முறையே 5 முதல் 10-வது இடங்களில் உள்ளனர். .