சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்பட்டனஎன்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு, நிகழ்ச்சியை நடத்தியநிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
ஏசிடிசி என்ற நிறுவனம் சார்பில் `மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.
தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்ததால் அரங்கம் நிறைந்து, வெளியேஏராளமானோர் காத்துக் கிடந்தனர்.
மேலும், போதிய அளவுக்கு வாகனநிறுத்துமிட வசதிகளைச் செய்யாததால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முடங்கியது. வடநெம்மேலியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய முதல்வர் ஸ்டாலினின் வாகனமும் நெரிசலில் சிக்கியது.
அப்பகுதியில் நெரிசலால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும்அவதிக்கு உள்ளாகினர். நிகழ்ச்சிக்குஅனுமதி பெறும்போது எத்தனை ரசிகர்கள் வருவார்கள் என்று தெரிவித்ததைவிட, மிக அதிமானோருக்குடிக்கெட்டுகளை விற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையில், நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசல் மற்றும் அதிகமான கூட்டத்துக்கான காரணங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், மருத்துவவசதிகள், நியமிக்கப்பட்ட தன்னார்வலர்களின் பணிகள் மற்றும் இசைநிகழ்ச்சி தொடர்பாக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்துமாறு டிஜிபிசங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதையடுத்து, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் ஆய்வுமேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்துள்ளார். தொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெற்ற காவல் எல்லைக்கு உட்பட்டபள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் அதிரடியாக இடமாற்றம்செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பான விவரங்கள் கேட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் ஏசிடிசிநிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “கடந்தஆகஸ்ட் மாதமே, அந்நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சிகளில் விற்பனையாகும் டிக்கெட் விவரங்களை மாநகராட்சிக்குத் தெரிவிக்க வேண்டும், அதில்10 சதவீத வருவாயை கேளிக்கை வரியாக மாநகராட்சிக்கு செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தி கடிதம் அளித்திருந்தோம்.
இந்த சூழலில், கடந்த 10-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்பட்டன என்ற விவரங்கள் கேட்டும், அதற்கான வரியைச் செலுத்தக் கோரியும் மாநகராட்சியின் சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகம் மூலமாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.