சென்னை: நடிகர் அஜித்குமார் பயன்படுத்திய பஜாஜ் பல்சர் 180சிசி பைக் ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. பைக் மெக்கானிக்காக தனது வாழ்க்கையை தொடங்கிய அஜித்குமாருக்கு பைக்குகள் மீது அலாதி ப்ரியம். ‘துணிவு’ படத்தை முடித்த கையுடன் அவர் பைக் சுற்றுலா சென்றார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன. தற்போது கூட அஜித் பைக் டூரில் இருப்பதால் படப்பிடிப்பு தாமதமாவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘திருப்பதி’. இப்படத்தில் அஜித் பயன்படுத்திய பல்சர் வண்டியை தங்களது அருங்காட்சியகத்தில் வைத்திருப்பதாக ஏவிஎம் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் தங்களது எக்ஸ் தள பக்கத்தில், “அஜித்குமார் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட். ஏவிஎம் தயாரிப்பில் வெளியான ‘திருப்பதி’ படத்தில் அஜித் பயன்படுத்திய பஜாஜ் பல்சர் 180சிசி, 2004 பைக் ஏவிஎம் ஹெரிடேஜ் அருகாட்சியகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோஸில் அமைக்கபட்டுள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இங்கு 1960-கள் தொடங்கி தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட பைக், கார்கள் உள்ளிட்ட சினிமா தொடர்பான பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தவிர, மற்ற நாட்களில் செயல்படும் இந்த அருங்காட்சியகம் காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணிக்கு மூடப்படுகிறது.