Tour

ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கான சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு சாத்தியமே. எப்படி? | Solution to the Increasing Traffic Congestion on the Road to Yercaud Tourist Destination is Possible How?

ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கான சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு சாத்தியமே. எப்படி? | Solution to the Increasing Traffic Congestion on the Road to Yercaud Tourist Destination is Possible How?
ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கான சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு சாத்தியமே. எப்படி? | Solution to the Increasing Traffic Congestion on the Road to Yercaud Tourist Destination is Possible How?


சேலம்: ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கான சாலையில் நெரிசல் அதிகரித்து வருவதால், தீவட்டிப்பட்டி- கரடியூர்- ஏற்காடு வழித்தடத்தில் புதிதாக சாலை அமைக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வழித்தடத்தில் உள்ள பாதைகள், 3 துறைகளிடம் பிரிந்துள்ளதால் அவற்றை ஒரே துறையின் கீழ் கொண்டு வந்தால் மட்டுமே திட்டம் சாத்தியமாகும், என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டு முழுவதும் நிலவும்குளிர்ந்த சீதோஷ்ண நிலை, மலைமுகடுகளுடன் கூடிய இயற்கை சூழல் ஆகியவற்றால் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய இடமாக ஏற்காடு சுற்றுலாத் தலம் இருக்கிறது.

சேலம் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் கோடை விழா மலர்க்கண்காட்சிக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஏற்காடு வந்து செல்கின்றனர். அது போன்ற நேரங்களில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, சேலம்- ஏற்காடு மலைப் பாதை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. மற்றொரு மலைப்பாதையான குப்பனூர் – ஏற்காடு பாதை குறுகியதாக இருப்பதால், அதில் வாகனங்கள் எதிரெதிர் திசையில் பயணிப்பது, சிரமமானதாகவே இருக்கிறது.

ஏற்காடு மலைப்பாதைகளில் மழைக்காலங்களில், ஆங்காங்கே மண் சரிவு ஏற்படுவதும் நிகழ்கிறது. இதனிடையே, ஏற்காடு மலையின் மேற்குப் பகுதியில் உள்ள சில மலைக் கிராமங்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி ஏற்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதியும் ஏற்காடு வந்து செல்வதற்கான 3-வது வழித்தடமாக, தீவட்டிப்பட்டி – கரடியூர் – ஏற்காடு பாதையை நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: ஏற்காடு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் சேலம் மாநகருக்கு வந்து, சேலம்-அடிவாரம்- ஏற்காடு சாலை வழியாகவே ஏற்காடு சென்று திரும்புகின்றனர். அதனால், இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் இருக்கிறது. எனவே, தீவட்டிப் பட்டி – கரடியூர் – ஏற்காடு என்ற வழித் தடத்தை, நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்களிடம் கோரிக்கை உள்ளது.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறையினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தீவட்டிப்பட்டி – ஏற்காடு இடையே மொத்தம் 41 கிமீ நீளத்துக்கான சாலை அமைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது கண்டறியப்பட்டது. அதில், தீவட்டிப்பட்டி- கணவாய்புதூர் வரை 16.4 கிமீ நீள சாலை, நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், கணவாய்புதூர் அருகே சுமார் 1 கிமீ நீள சாலை, காடையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாலையாக இருக்கிறது.

கணவாய் புதூருக்கு அடுத்து வரும் 4.5 கிமீ நீளமுடைய சாலை, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தொடர்ந்து மீண்டும் 2.5 கிமீ நீளமுள்ள சாலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் வருகிறது. சுரக்காய்பட்டி- கரடியூர் வரை ஏற்காடு ஊராட்சி ஒன்றிய சாலையாக உள்ளது. இதன் பின்னர் நாகலூரிலிருந்து ஏற்காடு வரை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் சாலை வருகிறது.

தீவட்டிப்பட்டி- கரடியூர்- ஏற்காடு வரையிலான வழித் தடத்தில் 25.2 கிமீ நீளமுள்ள பாதை நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பின்னர், ஓமலூர், காடையாம்பட்டி, ஏற்காடு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் சுமார் 12 கிமீ நீளமுள்ள பாதையும், வனத்துறை கட்டுப்பாட்டில் 4.5 கிமீ நீளமுள்ள பாதையும் இருக்கிறது.

மூன்று துறைகளின் கட்டுப்பாட்டில், பாதைகள் இருப்பதால், தீவட்டிப்பட்டி- ஏற்காடு இடையே புதிய பாதை அமைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக, ஒரே துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால் அந்த துறைக்கான ஆதாரங்களில் இருந்து, நிதி ஒதுக்கி சாலையை பராமரிக்க, புதிய சாலை அமைக்க முடியும். 3 துறைகளின் கட்டுப்பாட்டில் பாதைகள் பிரிந்து இருப்பதால், அவற்றை ஒருங்கிணைக்க முடியாமல், சாலையை பராமரிக்க முடியாமல் பல ஆண்டுகளாக இழுபறி நிலை உள்ளது.

எனவே, தீவட்டிப்பட்டி- கரடியூர்- ஏற்காடு வரையில் 3 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாதையை, நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்தால், அதனை நெடுஞ்சாலையாக மாற்றி, தொடர்ந்து பராமரித்து வர முடியும். பயணிகளுக்கு பாதுகாப்பான சாலையாகவும் இது அமையும்.

குறிப்பாக, தீவட்டிப்பட்டி – கரடியூர் – ஏற்காடு வழித் தடத்தில் புதிய சாலை அமைக்கப்பட்டால், கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்து வருபவர்கள், சேலம் மாநகருக்குள் வர வேண்டிய அவசியமின்றி, தீவட்டிப்பட்டியில் இருந்தே ஏற்காடு வந்து செல்ல முடியும். மேலும், சேலம் – ஏற்காடு மலைப் பாதையில் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்படும். இயற்கை இடர்ப்பாடு காலங்களில், இது மாற்றுப் பாதையாகவும் பயன்படும்.

கரடியூர், சுரக்காய்பட்டி உள்பட, ஏற்காடு மலையின் மேற்குப்பகுதியில் சிறு கிராமங்களுக்கு, போக்குவரத்து வசதி கிடைக்கும். எனவே, தீவட்டிப்பட்டி – கரடியூர் – ஏற்காடு இடையில் உள்ள வழித்தடங்களை, ஒரே துறையில், குறிப்பாக, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், சாலை அமைக்க போதுமான நிதி ஒதுக்கீடு பெற்று, சாலையை தரமாக அமைக்க முடியும், என்றனர்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *