கொல்கத்தா: குடியரசுத் தலைவரின் ஜி20 விருந்தில் கலந்து கொண்டதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “இது மோடி அரசுக்கு எதிரான அவரது நிலைப்பாட்டை பலவீனப்படுத்திவிடாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “அவர் (மம்தா பானர்ஜி) அந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறியிருக்காது. பல பாஜக அல்லாத முதல்வர்கள் விருந்து நிகழ்ச்சியை புறக்கணித்துள்ள நிலையில், அவர் விருந்துக்கு முதல் நாளே டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். இந்தத் தலைவர்களுடன் விருந்தில் கலந்துகொள்ள டெல்லி விரைந்து செல்ல அவருக்கு எது தூண்டுகோலாக இருந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?” என்று ஆதிர் ரஞ்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர், ‘குடியரசுத் தலைவரின் விருந்தில் கலந்து கொள்வதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் குற்றச்சாட்டுக்கு திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாந்தனு சென், “இண்டியா கூட்டணியின் காரணகர்த்தாக்களில் மம்தா பானர்ஜியும் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது அர்ப்பணிப்பை யாரும் கேள்வி கேட்க வேண்டாம். மரபுகளின் ஒரு பகுதியாக ஜி20 விருந்தில் ஒரு மாநில முதல்வர் எப்போது கலந்துகொள்ள வேண்டும் என்று சவுத்ரி முடிவு செய்ய வேண்டாம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இதனிடையே, மேற்கு வங்க மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சாரியா, “காங்கிரஸ் கட்சி, ஊழல் கட்சியான திரிணமூலுடன் கைகோத்துள்ளது. திரிணமூல் கட்சித் தலைவர்களின் ஊழல்களுக்கு எதிராக பாஜக மட்டுமே குரல் கொடுத்து வருகிறது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அவர்களுக்கு எதிராக சோதனை நடத்துகின்றன. மேற்கு வங்க மக்களுடன் பாஜக மட்டுமே நிற்கிறது. எனவே திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்படுவது, மாநில மக்களுக்கு துரோகம் செய்வது யார் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போன்றவர்கள் விளக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சனிக்கிழமை மாலை நடந்த குடியரசுத் தலைவரின் ஜி20 விருந்து நிகழ்வுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை காலையில் கிளம்புவதாக திட்டமிடப்பட்டது. ஆனால், டெல்லியில் அன்று விமானங்கள் இறங்க கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதால், அவர் வெள்ளிக்கிழமையே டெல்லி புறப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.