துபாய்: “என்னுடைய ரசிகர் (லோகேஷ் கனகராஜ்), என்னுடைய நண்பருக்கு (ரஜினி) படம் பண்ணுவது எனக்குத் தானே பெருமை” என கமல்ஹாசன் பேசியுள்ளார்.
துபாயில் ‘SIIMAAwards2023’ விருது வழங்கும் விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் (விக்ரம்), சிறந்த பின்னணி பாடகர் (பத்தல பத்தல) விருது வழங்கப்பட்டது. விருதை பெற்ற பின் பேசிய நடிகர் கமல்ஹாசன் “நான் இதுக்கு முன்பு 13, 15 வருடங்களுக்கு முன்பு நடந்த விழா ஒன்றில் கூறினேன்.
‘ரஜினியைப்போலவும், என்னைப்போலவும் நட்பு கொண்டவர்கள் இதற்கு முன்பு இருந்த தலைமுறையினரிடத்தில் இல்லை’ என்றேன். அந்த சவாலை நான் பின்னோக்கி சொன்னதற்கு காரணம், இதிலிருந்து வரும் தலைமுறை இன்னும் மேம்பட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என்னுடைய ரசிகர் (லோகேஷ் கனகராஜ்), என்னுடைய நண்பருக்கு (ரஜினி) படம் பண்ணுவது எனக்குத் தானே பெருமை. அது யாருக்கும் புரியமாட்டேங்குது. எங்களுக்குள் இருக்கும் போட்டி ஆரோக்கியமானது. ஆனால் தடுக்கிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம்” என்றார்.