
சென்னை: என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) மூன்றாம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கரிவெட்டி, கரைமேடு, கத்தாழை, மும்முடிச்சோழன், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் சுமார்25 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நிலம் கொடுத்த உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்கக் கோரி அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் தலைவரான சி.என்.ராமமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில் அவர்கூறியிருந்ததாவது:
ஏற்கெனவே 25 ஆயிரம் குடும்பங்களிடம் இருந்து 37,256 ஏக்கர்நிலத்தை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது. ஆனால்,அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. கையகப்படுத்தப்படும் நிலங்கள் விவசாய பயன்பாட்டு நிலங்கள் என்பதால் ஏக்கருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
அத்துடன், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு குறைந்தபட்ச இழப்பீட்டை கொடுத்துவிட்டு, நிலத்தின் சந்தை மதிப்புக்கு இணையாக என்எல்சி பங்குகளை வழங்க உத்தரவிட வேண்டும், கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு அருகிலேயே தங்களது கிராமங்களை மறுஉருவாக்கம் செய்துதர உத்தரவிட வேண்டும்.
வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளித்து முன்னுரிமை வழங்க வேண்டும், நிலத்தின் பயன்பாடு முடிந்தபிறகு அந்தந்த உரிமையாளர்களிடம் திருப்பித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கடந்த மார்ச் 27-ம் தேதி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, என்எல்சி சுரங்கப் பணிகளுக்காக 18 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நியாயமான இழப்பீடு சட்டப்படி உரிய இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக மறுவாழ்வு நடவடிக்கைகளை மட்டுமே என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
தமிழக அரசின் தரப்பில் மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகவில்லை என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணை முறையாக வெளியிடப்பட்டதா, இழப்பீடு வழங்கப்பட்டதா என்பன போன்ற விவரங்கள் மனுவில் இல்லை என்பதால்இந்த மனுவை ஏற்க முடியாது.பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும்’’ என கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.