
சென்னை: “திமுகவின் கொள்கையே சமத்துவம். எனவே, சனாதனம் ஒரு பக்கம் என்றால், சமத்துவம் ஒரு பக்கம். எனவே, ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் சமத்துவம் குறித்து பேசுவதற்கான உரிமை உண்டு. எனவே, திமுக தொடர்ந்து சமத்துவம் குறித்து பேசும்” என்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசு சார்பில் 1000 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் எத்தனை கோயில் கும்பாபிஷேகத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார் என கேள்வி எழுப்பியிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “தமிழிசை தெலங்கானாவுக்கும், புதுச்சேரிக்கும் ஆளுநர் தானே தவிர, தமிழகத்தில் உள்ள பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளர் அல்ல. இந்தக் கேள்வியைக் கேட்கும் தார்மிக உரிமை அவருக்கு இல்லை. அவர் சார்ந்திருக்கின்ற, ஆளுநராக இருக்கின்ற அந்த மாநிலங்களிலே இதுபோன்ற கும்பாபிஷேக நடவடிக்கைகளை முன்னெடுத்தால், இதுபோன்ற கேள்விகளைக் கேட்க அவருக்கு தகுதி உள்ளது. எனவே, போகிறபோக்கில் ஏதாவது சிண்டு முடிந்துவிட்டு போகும் வேலையை தமிழிசை, புதுச்சேரியிலும் தெலங்கானாவிலும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் வாயிலாக அவரை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
அப்போது, அமைச்சர் பதவியிலிருந்து நீங்கள் பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “என் மண் என்மக்கள் பயணம் எடுபடவில்லை. எனவே, அதை சரிசெய்ய ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும். இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், சனாதனம் ஒருபுறம் என்றாலும், இது சமத்துவத்துக்கான ஆட்சி.
திமுகவின் கொள்கையே சமத்துவம். எனவே, சனாதனம் ஒரு பக்கம் என்றால் சமத்துவம் ஒரு பக்கம். எனவே, ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் சமத்துவம் குறித்து பேசுவதற்கான உரிமை உண்டு. எனவே, திமுக தொடர்ந்து சமத்துவம் குறித்து பேசும். இதுபோன்ற அச்சுறுத்தல்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை எல்லாம், நான் 45 ஆண்டுகாலமாக சந்தித்து வருகிறேன்.
முதல்வர் 60 ஆண்டுகாலமாக இதுபோன்ற போராட்டங்களைச் சந்தித்து வருகிறார். எனவே, இதுபோன்ற உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் பயந்துவிடமாட்டோம். எங்களுடைய பணியின் வேகத்தை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இது. எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளால் எங்களது பணியின் வேகத்தை குறைக்க முடியாது” என்று அவர் கூறினார்.