சென்னை: தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் எழும்பூர்- தஞ்சாவூர் சோழன் விரைவு ரயில் உள்பட 10 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களை சோதனை அடிப்படையில் வழங்கி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் விரைவு ரயில்கள் குறிப்பிட்ட ஊர்களில் நின்று செல்வதற்கு பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்று, சோதனை அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தம் அளித்து, பின்னர் வரவேற்பு அடிப்படையில் நிரந்தரம் செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில், 10 ரயில்கள் குறிப்பிட்ட ஊர்களில் சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன் விவரம்:
சென்னை எழும்பூரில் இருந்துதஞ்சாவூருக்கு தினசரி இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் (16865) கடலூர் துறைமுகத்தில் அதிகாலை 2.09 மணிக்கு நின்று செல்லும். மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் (16866) நள்ளிரவு 12.23 மணிக்கு நின்று செல்லும். இந்த நிறுத்தம் செப். 20-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தினசரி இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் (20691) சாத்தூர் நிலையத்தில் காலை 9.30 மணிக்கு நின்று செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு தினசரி இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் மாலை 6.16 மணிக்கு நின்றுசெல்லும்.
இந்த நிறுத்தம் செப். 20-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதுதவிர, திருப்பதி-ராமேசுவரம் வாரம் மூன்று முறை விரைவு ரயில் (16779-16780) உள்பட 8 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.