பெல்கிரேடு: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் செர்பியாவின் பெல்கிரேடு நகரில் நடைபெற்று வருகிறது. 2024-ம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ள இந்தத் தொடரில் இந்திய வீரர்கள், உலக மல்யுத்த கூட்டமைப்பு கொடியின் கீழ் பங்கேற்றுள்ளனர். ஏனெனில் இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
தொடக்க நாளான நேற்று ஆடவருக்கான 70 கிலோ எடைப் பிரிவில் உலகத் தரவரிசையில் 26-வது இடம் வகிக்கும் இந்தியாவின் அபிமன்யு, 7-ம் நிலை வீரரான உக்ரைனின் இகோர் நிகிஃபோர்க்குடன் மோதினார். இதில் அபிமன்யு 19-9 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் மால்டோவாவின் நிக்கோலாய் கிரஹ்மேஸை 13-2 என்ற கணக்கில் தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் அபிமன்யு.
61 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் தகியா முதல் ஆட்டத்தில் மால்டோவாவின் லியோமிட் கோல்ஸ்னிக்கை 10-5 என்ற கணக்கில் தோற்கடித்தார். ஆனால் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஆகாஷ் தகியா 4-7 என்ற கணக்கில் உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானின் ஜஹோங்கிர்மிர்சா துரோபோவிடம் தோல்வி அடைந்தார்.