
காஞ்சிபுரம்: தேர்தல் நடைமுறை உலகம் பாத்திராத காலத்தில் முதன்முறையாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடவோலை மூலம் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறையை நடைமுறைப் படுத்தியதற்கு சாட்சியாக நிற்கிறது உத்திரமேரூர் குடவோலை முறை கோயில் எனப்படும் வைகுண்ட பெருமாள் கோயில்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தான் இந்த குடவோலை கோயில் உள்ளது. 8-ம் நூற்றாண்டில் இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. அடுத்தடுத்து வந்த பல்வேறு மன்னர்களும் கோயிலை பாரமரித்து பாதுகாத்தனர். விஜயநகர பேரரசர் காலங்களில் இக்கோயில் விரிவாக்கம் செய்து பராமரிக்கப்பட்டுள்ளது.
இதில், கி.மு.920-ம் ஆண்டு முதலாம் பராந்தக சோழர்களின் ஆட்சிக் காலத்தில் குடவோலை முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்தெடுக்கப் பட்டுள்ளனர். மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்புவோரின் தகுதிகள் மற்றும் தகுதியற்றவர்கள் குறித்தும் வரையறுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விவரங்களைத்தான் கல்வெட்டுகளாக அடைகாத்து வைத்திருக்கிறது இந்த வைகுண்ட பெருமாள் கோயில். இங்குள்ள மண்டபத்தின் சுவர்கள் முழுவதிலும் இன்றும் காணலாம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடவோலை முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இந்த கல்வெட்டுகள் ஆதாரம். மக்களாட்சி என்பது மக்கள் பங்கேற்புடன் தேர்தல் நடத்தப்பட்டு அவர்களில் ஒருவரை தங்களது பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்படுவதாகும். இப்படி ஒரு ஜனநாயக அமைப்பு முறையை உலகம் கண்டறியும் முன்பே தமிழகத்தில் அப்படி ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதை கண்டு உலகே வியக்கிறது.
இதற்கான ஆவணமாக குடவோலை முறை உலகுக்கே பறைசாற்றி வருகிறது. இதற்கான கல்வெட்டுகளையும் அவை அமைந்துள்ள கோயிலையும் தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. எனினும், இத்தகைய சிறப்பு வாய்ந்த குடவோலை கோயிலின் அருமை உள்ளூர் மக்கள்பலருக்கும் தெரியாது என்பதுதான் சோகம்.
பிரதமர் பெருமிதம்: இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உத்திரமேரூர் குடவோலை கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு குறித்தும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மகாசபை மற்றும் மக்கள் சபை நடைபெற்றுள்ளது குறித்தும் பேசினார்.
இதையடுத்து, குடவோலை முறை கோயில் குறித்து பலரும் அறிய தொடங்கியுள்ளனர். ஆனால், இக்கோயில் பொலிவின்றி காணப்படுகிறது. மேலும் இதனை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரம் அறிந்தவர்கள் பட்டியலிடுகின்றனர்.
வரலாற்று ஆய்வாளர் பாலாஜி கூறியதாவது: கோயில் சுற்றுச்சுவர் முழுவதும் கல்வெட்டுகளால் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், 500 ஆண்டுகள் தொடர்ச்சியான வரவு, செலவு மற்றும் கிராம நிர்வாக முறை குறித்து கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு சிறப்புமிக்க கோயிலை உலகம் அறியும் வகையில் சுற்றுலாத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருகில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வரும் சுற்றுலா பயணிகள் அறியும் வகையில், அச்சாலையில் குடவோலை கோயில் குறித்த தகவல் பலகைகள் அமைக்க வேண்டும். சாலைகளில் அலங்கார வளைவுகள் அமைத்தும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட பகுதிகளில் தகவல் பலகை அமைத்தும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கலாம்.
உள்ளூர் மக்கள் மற்றும் மாணவர்கள் அறியும் வகையில் கல்வெட்டில் உள்ள விவரங்கள் மற்றும் கோயிலின் வரலாற்று சிறப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வெளியிடலாம். இது தவிர, சுற்றுலா துறை சார்பில் வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்களை ஒருங்கிணைத்து மரபு நடை பயணத்துக்கு ஏற்பாடு செய்யலாம். இதனால் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக மாறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இவ்வாறு கூறினார்.
இது குறித்து, உள்ளூர் பொதுமக்கள் கூறியதாவது: இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது அரிதாக உள்ளது. காலை, மாலை6 மணிக்கு என சில நிமிடங்கள் மட்டுமே மூலவர்சந்நிதி திறக்கப்படுகிறது. அதனால், நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. அதனால், பிற கோயில்களில் போன்று இங்கும்நடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இரவு நேரங்களில் மின் விளக்கு வெளிச்சத்தில் குடவோலை முறை கோயிலை கண்டு ரசிக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கவும் துருப்பிடித்த இரும்பு வேலியை மாற்றியமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.