சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் லூத்திரல் கார்டன் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு உள்ளது. மிகவும் பழமையான இந்த குடியிருப்பில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மற்றும் பிரிவுகளில் பணிபுரியும் 150 போலீஸார் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த குடியிருப்பு பலவீன மானதாக உள்ளதாகக் கூறி இந்த குடியிருப்பில் வசிக்கும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள், 105 காவலர்கள் என முதல் கட்டமாக மொத்தம் 109 குடும்பங்களை உடனடியாக காலி செய்ய போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பான அறிவிப்பு சம்பந்தப்பட்ட போலீஸாரின் வீட்டு முகப்பில் கடந்த 1-ம் தேதி ஒட்டப்பட்டது. இக்குடியிருப்பில் உள்ள குடும்பத்தினரின் குழந்தைகள் குடியிருப்பைச் சுற்றியுள்ளபகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கின்றனர். இதுபோலவே பலர் வேலையும் பார்க்கின்றனர்.
இந்நிலையில் வீட்டை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. போதிய கால அவகாசமும் வழங்கவில்லை, மாற்று இடமும் வழங்கவில்லை. திடீரென உடனடியாக காவலர் குடியிருப்பை காலி செய்ய உத்தரவிட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட 109 காவலர் குடும்பங்கள் மனஉளைச்சலில் தவிக்கின்றன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட போலீஸார் தரப்பில் கூறும்போது, ‘பல ஆண்டுகளாக இங்கேயே வசிக்கிறோம். இப்பகுதி பள்ளிகளிலேயே குழந்தைகளை படிக்க வைக்கிறோம். போதிய கால அவகாசமும் மாற்று இடமும் வழங்காமல் உடனடியாக வீட்டை காலி செய்யுங்கள் என்றால் நாங்கள் எங்கு செல்வது, என்ன செய்வது? மேலும், புதிதாக வீடு ஒன்றை பார்த்து வாடகைக்கு அமர வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை தேவைப்படும்.
அவ்வளவு பணத்தை உடனடியாக எப்படி திரட்டுவது, பிள்ளைகளை வேறு பள்ளிகளிலும் உடனடியாக சேர்க்கவும் முடியாது. இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகள் எங்கள் பணியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உரிய மாற்று இடம் தந்து,கால அவகாசம் வழங்கி வீட்டை காலி செய்ய உத்தரவிட்டால் நன்றாக இருக்கும்’ என்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘லூத்திரல் கார்டன் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் கடந்த மாதம் 22-ம் தேதி காவலர் ஒருவரின் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் சம்பந்தப்பட்ட காவலரின் தாயார் காயம் அடைந்தார். இதையடுத்து, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் ஆய்வு செய்தது.
இதில், குடியிருப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், மேற்கூரை வலுவிழந்த நிலையில் உள்ளதாகவும், குடியிருப்பதற்கு தகுதியற்ற நிலையில் இருப்பதாகவும் அறிக்கை அளித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே 109 காவலர் குடும்பங்களை உடனடியாக குடியிருப்பை காலி செய்ய உத்தரவிட்டுள்ளோம்’ என்றனர்.
பாதுகாப்பு கருதி காவலர்களை காலி செய்ய சொல்வதில் தவறு இல்லை. ஆனால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, உரிய கால அவகாசம் வழங்கி காலி செய்ய வைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்படும் குடும்பத்தினரின் குரலாக உள்ளது.