புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத்தின் ஊதியம் குறித்து தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா வெளியிட்ட கருத்தால் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஊக்கமளிக்கும் வகையிலான கருத்துகளை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அவரது கருத்துகள் பெரும்பாலும் வரவேற்பைப் பெறும். இந்நிலையில் தனது எக்ஸ் சமூக வலைதளபக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் மாத ஊதியம் ₹ 2.5 லட்சம் என்று தெரியவந்துள்ளது. இது சரியா, நியாயமா? அவரைப் போன்றவர்கள் பணத்துக்கு அப்பாற்பட்ட காரணிகளால் உந்தப்பட்டவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்வோம். அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மீதான ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புக்காகவும், தேசத்தின் பெருமைக்காகவும், தங்கள் நாட்டுக்கு பங்களிக்கவும், தங்கள் நோக்கத்தை அடைவதில் தனிப்பட்ட நிறைவுக்காகவும் அவர்கள் அதைச் செய்கின்றனர். அவரைப் போன்ற அர்ப்பணிப்புள்ள மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்தப் பதிவை 7.46 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் அவரது கருத்தைப் பார்த்து நூற்றுக்கணக்கானவர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்ததோடு, லைக்கும் செய்துள்ளனர்.
இந்நிலையில் கோயங்காவின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி உள்ளது.
எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஒருவர், “நீங்கள் (ஹர்ஷ் கோயங்கா) கூறுவது முற்றிலும் உண்மை. இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் போன்றவர்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் அளவிட முடியாதவை” என்று கூறியுள்ளார்.
மற்றொருவர் கூறும்போது, “அவருக்கு மாதம்தோறும் ரூ.25 லட்சம் அல்லது அதற்கு மேலும் சம்பளம் கொடுக்கலாம். நமது திறமையை நாம் மதித்து, பரிசளிக்க வேண்டும்” என்றார்.
It is unfortunate when an able and honest Chairman of ISRO who has brought so much prestige to the nation, is attacked without any substance. ISRO is our national pride and we should all praise Somanath and his team for sacrificing their blood and sweat. https://t.co/lOMh8RZ1XT
— Harsh Goenka (@hvgoenka) September 12, 2023