புதுடெல்லி: 2023-24 நிதியாண்டு முதல் 2025-26 வரையிலான மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை விடுவிப்பதற்காக பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தை நீட்டிக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023-24 நிதியாண்டு முதல் 2025-26 வரையிலான மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை விடுவிப்பதற்காக பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
14.2 கிலோ ஒரு சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.2200, 5 கிலோ இரட்டை சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.2200, 5 கிலோ ஒரு சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.1300, உஜ்வாலா 2.0-ன் தற்போதைய முறைகளின்படி, இலவச எரிவாயு திட்டப் பயனாளிகளுக்கு முதலாவது சிலிண்டர் மற்றும் அடுப்பு இலவசமாக வழங்கப்படும்.
14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஆண்டுக்கு 12 மறு நிரப்புதல்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுகிறது. பிரதமரின் இலவச எரிவாயு திட்டத்தில் தொடராமல் போனால், தகுதியான ஏழைக் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் உரிய பயன்களைப் பெற முடியாமல் போகலாம்.
ஏழைக் குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு இணைப்புகள் தூய்மையான சமையல் எரிபொருளை அணுக உதவும். பாரம்பரிய சமையல் எரிபொருளான விறகு, நிலக்கரி, மாட்டு சாணம் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது. இது பெண்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும், மரம் சேகரிப்பதில் ஏற்படும் சிரமத்தை நீக்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மற்றும் சமையல் எரிபொருள் கிடைக்காததைத் தடுக்கும்.
சில தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு இன்னும் சமையல் எரிவாயு இணைப்பு இல்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன – அதிகரித்து வரும் மக்கள்தொகை, திருமணங்கள், இடம்பெயர்வு, விடுபட்ட வீடுகள், மிகவும் தொலைதூர இடங்கள் போன்றவற்றின் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் புதிய குடும்பங்கள் உருவாகின்றன. 2023, ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி 15 லட்சம் பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புகளுக்கான தேவை உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.