Sports

இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்திய அணி! | team india entered asia cup final after defeating Sri Lanka by 41 runs

இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்திய அணி! | team india entered asia cup final after defeating Sri Lanka by 41 runs


கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.

கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. ஷர்துல் தாக்குருக்கு பதிலாக அக்சர் படேல் இடம் பெற்றார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் கூட்டணி அருமையான தொடக்கம் கொடுத்தது.

11 ஓவர்களில் 80 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான துனித் வெல்லலகே பந்தில் ஷுப்மன் கில் போல்டானார். அவர், 25 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் இந்திய அணி ஆட்டம் கண்டது. பாகிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் வேட்டையாடிய விராட் கோலி வெறும் 3 ரன்களில் வெல்லலகே பந்தில் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்தார்.

தனது 51-வது அரை சதத்தை விளாசிய ரோஹித் சர்மா 48 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்த நிலையில் வெல்லலகே வீசிய மிக தாழ்வான பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதன் பின்னர் இஷான் கிஷனுடன் இணைந்த கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார். 4-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடியை வெல்லலகே பிரித்தார். கே.எல்.ராகுல் 44 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் வெல்லலகே வீசிய பந்தில் அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார்.

நிதானமாக பேட் செய்த இஷான் கிஷன் 61 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் சாரித் அசலங்கா பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 5, ரவீந்திர ஜடேஜா 4, ஜஸ்பிரீத் பும்ரா 5, குல்தீப் யாதவ் 0 ரன்களில் நடையை கட்டினர். இறுதிக்கட்டத்தில் மட்டையை சுழற்ற முயன்ற அக்சர் படேல் 36 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் தீக்சனா பந்தில் வெளியேற 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி. மொகமது சிராஜ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை அணி சார்பில் துனித் வெல்லலகே 10 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 40 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார். சாரித் அசலங்கா 4 விக்கெட்கள் கைப்பற்றினார். 214 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பதும் நிஷங்கா 6, குஷால் மெண்டிஸ் 15 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தனர். திமுத் கருணரத்னே 2 ரன்னில் மொகமது சிராஜ் பந்தில் வெளியேறினார்.

சதீரா சமரவிக்ரமா 17, சாரித் அசலங்கா 22 ரன்களில் குல்தீப் யாதவ் பந்திலும், கேப்டன் தசன் ஷனகா 9 ரன்னில் ஜடேஜா பந்திலும் ஆட்டமிழந்தனர். 25.1 ஓவரில் 99 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் தனஞ்ஜெயா டி சில்வா, துனித் வெல்லலகே ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தது. 63 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். தனஞ்ஜெயா டி சில்வா 66 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் மிட் ஆன் திசையில் நின்ற ஷுப்மன் கில்லிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அப்போது வெற்றிக்கு 12.1 ஓவரில் 52 ரன்கள் தேவையாக இருந்தது.

40-வது ஓவரை வீசிய ஜடேஜா தீக்சனாவை ரன் அவுட்செய்ய கிடைத்த எளிதான வாய்ப்பை தவறவிட்டார். கடைசி 10 ஓவர்களில் இலங்கை அணியின் வெற்றிக்கு 44 ரன்கள் தேவையாக இருந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவின் அற்புதமான கேட்ச்சால் தீக்சனா (2) ஆட்டமிழக்க இலங்கை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதைத் தொடர்ந்து ரஜிதா (1), மதிஷா பதிரான (0) ஆகியோரை குல்தீப் யாதவ் போல்டாக்க 41.3 ஓவர்களில் இலங்கை அணி 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. துனித் வெல்லலகே 46 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும் ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் 15-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. அதே வேளையில் இலங்கை அணி தனது கடைசி ஆட்டத்தில் நாளை (14-ம் தேதி) பாகிஸ்தானை சந்திக்கிறது.

ரோஹித்-கோலி அசத்தல்: இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா – விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக 5 ஆயிரம் ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த மைல்கல் சாதனையை இந்த ஜோடி 86 இன்னிங்ஸ்களில் எட்டி உள்ளது. இதற்கு முன்னர் மேற்கு இந்தியத் தீவுகளின் கோர்டன் க்ரீனிட்ஜ், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஜோடி 97 இன்னிங்ஸில் 5 ஆயிரம் ரன்களை குவித்திருந்தது சாதனையாக இருந்தது.

விரைவாக1,000 ரன்கள்: ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விரைவாக 1,000 ரன்களை சேர்த்த ஜோடி என்ற சாதனையை ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி படைத்துள்ளது. இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 36 ரன்களை எடுத்திருந்த போது இந்த சாதனையை நிகழ்த்தினர். இந்த மைல்கல் சாதனையை ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி 12 போட்டிகளில் எட்டி உள்ளனர். இதற்கு முன்னர் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஜோடி 14 ஆட்டங்களில் ஆயிரம் ரன்களை எட்டியது சாதனையாக இருந்தது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *