சேலம்: இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
சேலம் அஸ்தம்பட்டி அருகே மணக்காடு பகுதியில் 2017-ல் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் சீமான்பேசியது, இந்திய இறையாண்மைக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதாக என்று, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குவிசாரணை சேலம் 3-வதுகூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக சீமான் நேற்று சேலம் நீதிமன்றத்துக்கு வந்தார்.
சேலம் 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அவர் ஆஜரானார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அஸ்தம்பட்டியில் நடந்த கூட்டத்தில் நான் பேசும்போது, ‘யாரிடமிருந்து, யாரைப் பாதுகாக்க இந்திய கடற்படை உள்ளது. என்மீனவ மக்களைப் பாதுகாக்க நெய்தல் படை அமைப்பேன்’ என்றேன். ஊர்க்காவல் படை, காவல் படைபோல மீனவர்களைப் பாதுகாக்க நெய்தல் படை அவசியமாகும்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனைநடத்துவது வெறும் அச்சுறுத்தலுக்காவே. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். வரும் மக்களவைத் தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.