கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சும் தீவு கிராமமான கொடியம்பாளையத்தை காண பலர் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். இந்த கடற்கரை கிராமத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று அக்கிராம மக்கள் விரும்புகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள் ளிடம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கொடியம் பாளையம் தீவு கிராமம். கொள்ளிடம் ஆற்றின் முகத்துவார பகுதியில் வங்க கடல் அருகே உள்ளது இந்த கிராமம். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இந்த தீவு கிராமம் மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்டது என்றாலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிக்கு மிக அருகில் உள்ளது. இந்த இடத்தில் இருந்து, சீர்காழி அருகே உள்ள பழையாறு மீனவ கிராமத்துக்கு படகில் செல்ல 40 நிமிடங்கள் ஆகும்.
இவ்வாறு நீர்வழிச் செல்வது நெடும் பயணம் என்பதால், இப்பகுதியில் உள்ளவர்கள் சாலை மார்க்கமாக சட்டென சிதம்பரம் வந்து, பின்னர் சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பயணிக்கின்றனர். கொடியம்பாளையம் தீவு கிராம மக்கள் தங்களது அன்றாட அனைத்து தேவைகளுக்காகவும் அருகில் உள்ள சிதம்பரம் நகரைச் சார்ந்திருக்கின்றனர். சிதம்பரத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் மினி பேருந்துகள் இந்த கிராமத்துக்கு இயக்கப்படுகின்றன.
ஒருபுறம் வங்கக்கடல், மறுபுறம் கொள்ளிடம் ஆறு என நீரால் சூழப்பட்ட இக்கிராமத்தைச் சுற்றிலும் அலையாத்திக் காடுகள் உள்ளன. நீண்ட எழில் கொஞ்சும் கடற்கரையில், அழகிய மணல் மேடுகள் காணப்படுகின்றன. எந்தவித ஆராவாரமும் இன்றி அமைதியாக உள்ள தீவு கிராமம் இது.
இத்தீவு கிராமத்தை கரையுடன் இணைக்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. பாலம் திறக்கப்பட்ட பின், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வருகை அதிகரித்து வருகிறது. தற்போது இப்பகுதி, அரசால் அறிவிக்கப்படாத ஒரு சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளதாக அரசு விவரங்கள் தெரிவிக்கின்றன.
சிதம்பரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தூரம் உள்ள இந்த தீவு கிராமத்தை முறையாக சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இப்பகுதியில் உள்ள உப்பனாற்றில் படகு குழாம் அமைத்தால், சுற்றுலா பயணிகள் குவிந்து, இயற்கையின் அழகை அனுபவித்து, மகிழ்ந்து செல்வார்கள் “எங்கள் கிராமத்தை சுற்றுலா தலமாக்க வேண்டும். மணற்பாங்கான கடற்கரை பகுதியில் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா அமைக்க வேண்டும். கடற்கரையையொட்டி சாலை வசதி, காத்திருப்போர் கட்டிடம், குடிநீர் வசதி, பெண்கள் உடை மாற்றும் அறைகள், கழிப்பறை வசதி போன்றவை அமைக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகளைச் செய்து, இங்குள்ள கடற்கரை பகுதி முறையாக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட வேண்டும். எங்கள் தீவு கிராமத்தில், இயற்கை மணத்துடன் தயார் செய்யப்பட்ட கடல் உணவு வகைகளை கடற்கரைப் பகுதியில் கிடைக்கச் செய்யலாம். இதன் மூலம் எங்களுக்கும் வருவாய் கிடைக்கும்” என்று இக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
முதற்கட்டமாக பிச்சாவரம், சிதம்பரம் நடராஜர் கோயில், கொடியம்பாளையம் கடற்கரை ஆகியவற்றை ஒன்றிணைத்து சுற்றுலாத்துறை தனி பேருந்துகளை குறைந்த கட்டணத்தில் இயக்கலாம். மணற்பாங்கான நீண்ட கடற்கரை, அதில் ஆங்காங்கே காணப்படும் மணல்மேடுகள் அதில் படர்ந்திருக்கும் மாங்குரோவ் வகை தாவரங்கள் என கொடியம்பாளையம் நிச்சயம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்.