
புதுடெல்லி: முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:
ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் 4 வழி சாலை திட்டம், திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் 4 வழிசாலை திட்டம், சென்னை வண்டலூர் – வாலாஜா 6 வழி சாலை விரிவாக்கம் ஆகிய திட்டங்களிலும், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின்கீழ் நெடுஞ்சாலை துறையின் கட்டுமானம், பராமரிப்பு பணி திட்டங்களிலும் முறைகேடு நடந்துள்ளது.
ரூ.4,800 கோடி மதிப்பிலான இந்த டெண்டர்களை பழனிசாமி தனது சம்பந்தி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியதன் மூலம், அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைந்துள்ளார். எனவே, அவரை ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘‘இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் எந்த குறையும் காண முடியாது. புதிதாக விசாரணை நடத்த எந்த காரணமும் இல்லை’’ என்று கூறி, பழனிசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் அரசு வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்திருப்பது சட்டவிரோதம் என்பதால், வழக்கைதொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி, கேவியட் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.