State

“இந்தியப் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்” – கே.எஸ். அழகிரி | Tamil Nadu Congress Committee President KSAlagiri slams modi

“இந்தியப் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்” – கே.எஸ். அழகிரி | Tamil Nadu Congress Committee President KSAlagiri slams modi


சென்னை: “மக்களுக்காக ஆட்சி செய்யாமல் அதானி, அம்பானியை வளர்க்க முயற்சி செய்கிறீர்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளைக் குவித்து ஊழலை வளர்க்காதீர்கள். இந்தியப் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”மக்களவையில் திங்கள் கிழமை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திராகாந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர்” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். குஜராத்தின் முதல்வராக இருந்த போது ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யபட்ட போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல வேடிக்கை பார்த்து, சிறப்புப் புலனாய்வு விசாரணையிலிருந்து தப்பி, இன்றைக்கு இந்தியாவின் பிரதமராக 10 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார்.

அதற்குத் துணையாக இருந்த அமித்ஷா இன்றைக்கு உள்துறை அமைச்சராக இருக்கிறார். இத்தகைய பொறுப்புகளை இவர்கள் ஏற்றிருப்பது இந்தியாவுக்கே கேடு விளைவிக்கக் கூடியதாகும். அதைத் தான் இந்தியா இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தொடர்ந்து வரலாற்றுத் திரிபு வாதங்களைச் செய்து வருகிறார். ஆயிரம் மோடிகள் ஒன்று சேர்ந்தாலும் இந்தியாவின் வளர்ச்சியில் பண்டித நேரு, இந்திரா காந்தி ஆகியோரது பங்களிப்பை இத்தகைய அவதூறு பிரசாரங்களினால் மறைத்துவிட முடியாது.

இந்தியாவின் பிரதமராக 1947 ஆகஸ்ட் 15 இல் நேரு பதவியேற்ற போது, அன்று நள்ளிரவில் அவர் ஆற்றிய உரை இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாக பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இன்றைக்கும் மின்னிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பிரதமராக டெல்லி செங்கோட்டையில் 17 முறை தேசியக் கொடியை ஏற்றி அற்புதமான உரைகளை நிகழ்த்தியவர் பண்டித நேரு. அதில் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நிகழ்த்திய உரையை பிரதமர் மோடி திரித்துப் பேசியிருக்கிறார்.

இந்த உரையில் பிரதமர் நேரு ‘ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்குக் காரணம் கடுமையான உழைப்பு தான். கடின உழைப்பு நமக்குப் புதிதல்ல, இதற்கு எதிரான சோம்பல் நமது இயல்பு அல்ல. அறிவாலும், கடின உழைப்பாலும் நாமும் முன்னேறலாம். உழைப்பில்லாமல் உயர்வில்லை” என்று பேசியதைத் திரித்துப் பேசுவது பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு அழகல்ல. இத்தகைய பேச்சுகளின் மூலம் நேருவின் புகழ் குறையாது. மாறாக, மோடியின் தரம் தான் குறையப் போகிறது. இதற்குக் காரணம், காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி தான்.

பிரதமர் பதவியை நேரு ஏற்பதற்கு முன்பாக 1943 இல் வங்காள பஞ்சத்தில் 30 லட்சம் இந்தியர்கள் மடிந்தனர். குண்டூசி கூட தயாரிக்க முடியாத அவலநிலையிலிருந்த இந்தியாவில் 1947 இல் பிரதமராக பதவியேற்றார். 17 ஆண்டுக் காலத்தில் ஒருநாளைக்கு காலை 6.30 மணி முதல் நள்ளிரவு வரை 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல கடுமையாக உழைத்த பண்டித நேரு மீது இத்தகைய கடுமையான விமர்சனத்தை மேற்கொள்வது மோடியின் கல் நெஞ்சத்தையே காட்டுகிறது. மாட்டு வண்டிகள் நிறைந்திருந்த நாட்டை அணுசக்தி நாடாகவும், விண்கலங்களை ஏவுகின்ற நாடாகவும் மாற்றிக் காட்டியவர் பண்டித நேரு.

பஞ்சத்திலும், பட்டினியிலும் உழன்று கொண்டிருந்த நாட்டில் விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கினார். 1954 இல் 740 அடி உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய அணையை பக்ராநங்கலில் கட்டி 15 லட்சம் ஏக்கர் நீர்ப்பாசனத்தைப் பெருக்கி, 13 லட்சம் டன் கோதுமை உற்பத்தியை செய்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு எய்தியவர் பண்டித நேரு. எண்ணற்ற அணைகள், நீர்ப்பாசன திட்டங்கள் என்று சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தொழிற்சாலைகளை பொதுத்துறையில் துவங்கினார். ரூர்கேலா, பிலாய், துர்காபூர் ஆகிய இடங்களில் உருக்கு ஆலைகளை நிறுவினார். பொதுத்துறை நிறுவனங்களை நவீன இந்தியாவின் கோயில்கள் என்று அழைத்து மகிழ்ச்சி அடைந்தார். நேரு வளர்த்த பொதுத்துறையை இன்றைக்கு தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்த்து பிரதமர் மோடி அழித்துக் கொண்டிருக்கிறார்.

1960 இல் மோடி பிறந்த குஜராத் மாநிலத்தில் அங்லேஷ்வரில் முதல் முதலாக எண்ணெய் கிணறு தோண்டப்பட்டு அந்த சோதனையை நேரில் பார்த்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தவர் பண்டித நேரு. அவரது கண்டுபிடிப்பு தான் ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, எரிவாயு உற்பத்திக்கு வழிவகுத்த பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன். அவர் தொடங்கிய ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், ஆயுள் காப்பீட்டு கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனத்தை தனியார் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்த மோடி, பிரதமர் நேருவைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது ?

1959 இல் கிண்டியில் ஐ.ஐ.டி. தொடங்கி, கான்பூர், தில்லி என 5 ஐ.ஐ.டி. நிறுவனங்களை உருவாக்கியவர் பிரதமர் நேரு. அறிவியல் துறையில் வளர்ச்சியின் மூலம் பாபா அணு ஆராய்ச்சி மையம், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் என இந்தியாவை வளர்த்தெடுத்தவர் பண்டித நேரு. இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதியைக் காக்க 1951 இல் அரசமைப்புச்சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்தவர். தீண்டாமை குற்றச் சட்டம், குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியவர். வெளியுறவுக் கொள்கையில் வல்லரசுகளுக்கு எதிராக அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கியவர்.

பண்டித நேருவை விமர்சனம் செய்கிற அதேநேரத்தில் அன்னை இந்திரா காந்தியையும் விமர்சனம் செய்திருக்கிறார். இந்தியாவின் பிரதமராக 15 ஆண்டுகள் பொறுப்பேற்று வங்கிகள் தேசியமயம், மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கதேச போர் வெற்றி, இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையை பொக்ரானில் நிகழ்த்தியவர், முதல் விண்வெளி பயணத்தின் மூலம் முதல் இந்தியராக ராகேஷ் சர்மாவை அனுப்பி சாதனை படைத்தவர். வெளிநாட்டுக் கொள்கையில் அரசியல் பேராண்மையோடு செயல்பட்டவர். இந்திய – சோவியத் நட்புறவு ஒப்பந்தம் கண்டவர், வங்கதேச வெற்றிக்காக வாஜ்பாய் அவர்களால் துர்காதேவி என்று அழைக்கப்பட்டவர். இத்தகைய வரலாற்றுச் சாதனைகள் படைத்தவர்களை பிரதமர் மோடி கொச்சைப்படுத்துவதை நாட்டு மக்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

1947 ஆகஸ்ட் 15, ஜனவரி 26, 1950 ஆகிய இரு நாட்களை தவிர, தொடர்ந்து 22 ஆண்டுக்காலம் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றாத, அது ஒரு துண்டு துணி என்று கொச்சைப்படுத்திய பாரம்பரியத்தில் வளர்ந்த பிரதமர் மோடி, காங்கிரஸ் பாரம்பரிய தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. காங்கிரஸ் தலைவர்கள் செய்த தியாகங்களுக்கு இணையாக ஆர்.எஸ்.எஸ். வழிவந்த தலைவர்களில் எவரது பெயரையாவது மோடியால் ஒப்பிட்டுக் கூற முடியுமா ? அத்தகைய தியாக வரலாறு இல்லாத பின்னணியில் வந்த பிரதமர் மோடி, இந்தியாவின் விடுதலைக்காகவும், நவீன இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பண்டித நேரு, இந்திரா பாரம்பரியத்தைச் சிதைத்து விட்டால் தலைவர் ராகுல் காந்தியின் எழுச்சியைத் தடுத்து விடலாம் என்று கனவு காண்கிறார்.

ஆனால், ராகுல் காந்தி மக்களோடு மக்களாக, மக்களுடன் உரையாடி, மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்கிற மாபெரும் ஒற்றுமை பயணத்தை நீதி கேட்டு மேற்கொண்டு வருகிறார்.எனவே, கடந்த 9 ஆண்டுகளில் 117 லட்சம் கோடி கடன் வாங்கி இந்திய பொருளாதாரத்தை திவாலான நிலைக்கு அழைத்துச் செல்கிற பிரதமர் மோடி அவர்களே, இந்திய மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள்.

அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிற ரூபாயின் மதிப்பைத் தடுத்து நிறுத்துங்கள். மக்களுக்காக ஆட்சி செய்யாமல் அதானி, அம்பானியை வளர்க்க முயற்சி செய்கிறீர்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளைக் குவித்து ஊழலை வளர்க்காதீர்கள். இந்தியப் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *