
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் பொது சுகாதாரத் துறையினர் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் அனைத்து பிரதான சாலைகளில் தூய்மைப்பணிகளையும், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான தளவாடப்பொருட்களை வாங்கிட ரூ. 9.50 லட்சம் ஒதுக்கீடு செய்து கடந்த நவ. 10-ம் தேதி நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரத்தில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்தின் பின்புறமுள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்துக்கு தளவாடப்பொருட்கள் அண்மையில் வந்து இறங்கின. அதில் குப்பைகள் அள்ளும் கருவியான மூங்கில் படல் (தென்னந்துடப்பை விரித்து மூங்கில் கழியில் கட்டி உபயோகப்படுத்துவது) பிளாஸ்டிக்கில் கருப்பு- சிவப்பு வண்ணத்தில் இருந்ததை கண்ட பொதுமக்கள் இதனை சமூக வலைதளங்களில் ‘இதிலுமா … கருப்பு சிவப்பு..?’ என பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் மதன்குமாரிடம் கேட்டபோது, ‘தளவாடப்பொருட்கள் வாங்க நகராட்சிமன்ற கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இன்னமும் டெண்டர் விடப்படவில்லை. கடந்தாண்டு ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் தூய்மை பணிக்கான தளவாடப்பொருட்களை வாங்கியுள்ளனர். தற்போது வந்து இறங்கிய தூய்மை பணிக்கான தளவாடப்பொருட்களில் உள்ள வண்ணம் கருப்பு-சிவப்பு அல்ல, கருப்பு- ஆரஞ்ச் வண்ணமாகும்” என்றார். மேலும் இதுகுறித்து நகராட்சி ஆணையர் ரமேஷிடம் கேட்டபோது, “தற்போது வந்து இறங்கிய தூய்மைப்பணிக்கான கருவிகளின் வண்ணம் கருப்பு- சிவப்பு அல்ல, கருப்பு- ஆரஞ்ச் என்று தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்” என்றார்.