கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்தியா. இதற்கு பிரதான காரணம் இந்திய அணியின் பவுலர் முகமது சிராஜ்.
இறுதிப் போட்டியில் அபாரமாக பந்து வீசிய அவர் இலங்கை அணியின் விக்கெட்களை அதிவேகமாக கைப்பற்றினார். 7 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருந்தார். இந்தப் போட்டியில் 34 டாட் பந்துகளை அவர் வீசி இருந்தார். இதன் மூலம் தனித்துவ சாதனைகளை அவர் படைத்துள்ளார். சிறப்பாக பந்து வீசிய அவருக்கு ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
“நான் சிறிது காலமாக சிறப்பாக பந்து வீசி வருகிறேன். எனக்கு இந்தப் போட்டியில் எட்ஜ் கிடைத்தது. பந்து ஸ்விங் ஆனது. அதனால் பேட்டர்களை விளையாடத் தூண்டும் வகையில் பந்து வீசினேன். நான் நினைத்தது போலவே பந்து வீசி அதில் வெற்றி பெற்றேன். விக்கெட் சிறப்பானதாக இருந்தது.
அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையிலான பிணைப்பு பலமாக உலாளது. அப்படி இருக்கும் போது ஆட்டத்தில் அழுத்தம் உருவாகி, எதிரணியின் விக்கெட்களைப் பெற அது உதவும். பவுண்டரியை தடுக்கும் நோக்கில் பந்து வீசியவுடன் நானே அதை விரட்டி சென்று தடுக்க முயன்றேன். இது எனது சிறந்த ஸ்பெல். இந்த பரிசுத் தொகையை மைதான பராமரிப்பு பணியாளர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். அவர்கள் இல்லாமல் இந்த தொடர் நடந்திருக்க வாய்ப்பு இல்லை” என சிராஜ் தெரிவித்தார்.