மதுரை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு நன்றி தெரிவித்து மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் சொக்காயி தன்னுடைய வீட்டின் முன்பு கோலமிட்டார். கவனம் ஈர்த்த இந்தச் சம்பவம், அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மதுரையில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் இரு வேறு இடங்களில் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தனர். இந்தத் திட்டத்தில் ரூ.1000 வங்கியில் பெற்ற பெண்கள், அந்த திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து காலையில் தங்கள் வீடுகள் முன் கோலமிட்டு வரவேற்றனர். மாநகராட்சி 26-வது வார்டிலும் பெண்கள், தங்கள் வீடுகள் முன் இதுபோல் கோலமிட்டு தமிழக அரசின் இந்தத் திட்டத்தை வரவேற்றனர்.
26-வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த சொக்காயி இருந்து வருகிறார். நரிமேடு பகுதியை சேர்ந்த இவர், இன்று காலை தன்னுடைய வீட்டின் முன், “கலைஞர் உரிமைத் தொகை வழங்கிய தளபதிக்கு நன்றி, கே.சொக்காயி, கவுன்சிர், 26-வது வார்டு” என்று கோலம் இட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரவேற்றுள்ளார்.
தமிழக அரசியலில் திமுகவும், அதிமுகவும் எதிர்ரெதிர் துருவங்களாக அரசியல் செய்யும் நிலையில், தற்போது திமுக அரசின் திட்டத்துக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து அதிமுக கவுன்சிலரே தன்னுடைய வீட்டில் பகீரங்கமாக நன்றி தெரிவித்து கோலம் இட்ட இச்சம்பவம், மாநகர அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கவுன்சிலர் சொக்காயிடம் கேட்டபோது, “நான் அதிமுகவில்தான் இருக்கிறேன். என்னுடைய வார்டு பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் திட்டத்தை வரவேற்றேன். அதற்கும், அரசியலுக்கும் என்ன இருக்கிறது” என்றார்.
மதுரை மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலை ராஜாவிடம் கேட்டபோது, “மாநகராட்சியில் 15 அதிமுக கவுன்சிலர்கள் உள்ளோம். மாநகராட்சியில் நாங்களெல்லாம் ஒரு குழுவாக செயல்படும்போது, சொக்காயி மட்டும் திமுகவுக்கு சாதகமாகவே கடந்த 6 மாதமாக செயல்பட்டு வந்தார். எம்எல்ஏ நிதி பெற வேண்டும் என்பதற்காக திமுக மாநகர செயலாளர் தளபதி கூறுவதை கேட்டு நடக்கிறார்.
திமுகவில் நேரடியாக சேர்ந்தால் அவரது பதவி காலி ஆகிவிடும் என்பதால் அதிமுகவில் இருந்துகொண்டே திமுகவை ஆதரிக்கிறார். அவர் கோலம் போட்டு திமுக திட்டத்தை வரவேற்றது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் இப்படி கோலம் போட்டு திமுக திட்டத்தை வரவேற்க விட்டால்தான் ஆச்சரியப்பட வேண்டும்” என்றார்.
அதிமுக மாநகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூவிடம் கேட்டபோது, “சொக்காயி, திமுக, அதிமுக இரண்டு பக்கமும் இருந்து வருகிறார். அந்த வார்டு வட்ட செயலாளர் கூறினார் என்பதற்காக “சீட்” கொடுத்தேன். 4 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து திமுகவினர் வழக்குப் போட்டனர். மதுரை மாநகர அதிமுக சார்பில் அந்த வழக்கை சந்தித்து அவரை அந்த வழக்கில் வெற்றிப் பெற வைத்தோம். தற்போது அதை எதிர்த்து திமுகவினர் உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். அந்த வழக்குக்கு பயந்து அவர், இப்படி நடந்து கொண்டிருக்கலாம்” என்றார்.