
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடியைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை பனையூரில் அண்மையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையான நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.
நடிகர் கார்த்தி: 3 தசாப்தங்களுக்கு மேலாக நாம் ரஹ்மான் சாரை அறிந்து அவரை நேசித்திருக்கிறோம். இசை நிகழ்ச்சியின்போது நடந்தது துரதிர்ஷ்டவசமானது. எனினும், அந்த நிகழ்வால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். என்னுடைய குடும்பமும் அந்த இசைநிகழ்ச்சியில் நடந்த குழப்பத்துக்கு மத்தியில் தான் இருந்தனர். ஆனால் நான் ஏ.ஆர்.ரஹ்மான் சாருடன் நிற்கிறேன். நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். ரஹ்மான் சார் அனைவருக்கும் எப்போதும் அன்பை வழங்கியதைப் போல ரசிகர்கள் அனைவரும் வெறுப்பை தாண்டி அன்பை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
படிக்க —-> ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்கிறேன்: யுவன் ஷங்கர் ராஜா ஆதரவு
இயக்குநர் சீனு ராமசாமி: பல வருடங்கள் தேக்கித்தான் ஊரெல்லாம் சொற்களின் ஆறு கவிதைகள் கொட்டி ஓடட்டும் என்றே மலையின் முகட்டில் இசைத்தேன். வஞ்சகம் விரைந்து வரும் அளவுக்கு நன்மைக்கு எப்போதும் வழிநீண்ட வனத்தாமதம். மனித நகரம். நகர மனிதம். கவனம் ஈர்க்கும் இசையின் காலமே வாழ்க.
குஷ்பு: சென்னை இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ஆர் ரசிகர்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய குழப்பங்கள் மற்றும் கஷ்டங்கள் குறித்து கேள்விப்பட்டேன். தன்னுடைய ரசிகர்கள் அதிருப்தி அடையக் கூடாது என்பதை ரஹ்மான் எப்போதும் உறுதி செய்வார். என்னுடைய மகள் மற்றும் அவளது நண்பர்களும் டைமண்ட் பாஸ் இருந்தும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்கள் மத்தியில் இருந்தனர். நிகழ்ச்சி நடந்த இடத்தை அடைய அவர்களுக்கு மூன்று நேரம் ஆனது. இது மிகவும் துரதிர்ஷ்வசமானது. ஆனால் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினை எதற்கும் ஏ.ஆர்.ரஹ்மானை பொறுப்பாக்க முடியாது. ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சியை காண்பதற்காக கட்டுக்கடங்காமல் வந்த மக்கள் கூட்டத்தை கையாளாத நிர்வாகத்தின் ஒட்டுமொத்த தோல்வி இது. ரஹ்மான் எப்போதும் தன்னுடைய இசை, வார்த்தைகள், நடவடிக்கைகள் மூலம் அன்பையும் அமைதியையும் பகிர்ந்து வந்துள்ளார். அவருக்கு தகுதியான விஷயங்கள் தொடர்ந்து அவருக்கு கிடைக்கட்டும். நாம் அவருடன் உறுதுணையாக நின்று, அனைத்தும் சரியாகும் என்று அவருக்கு சொல்வோம்.