State

இண்டியா கூட்டணியோடு இணைந்து குரல் எழுப்புவோம்: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் | DMK MP’s pass resolution to stand with INDIA alliance in the upcoming special session

இண்டியா கூட்டணியோடு இணைந்து குரல் எழுப்புவோம்: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் | DMK MP’s pass resolution to stand with INDIA alliance in the upcoming special session
இண்டியா கூட்டணியோடு இணைந்து குரல் எழுப்புவோம்: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் | DMK MP’s pass resolution to stand with INDIA alliance in the upcoming special session


சென்னை: “பாஜக அரசை, நாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொள்வோம்” என்று திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மான விவரம் வருமாறு: “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை” துவக்கிவைத்து – ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய – தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நன்றியை பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.

காவிரி நதிநீர் பிரச்சனையில் நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளை பொருட்படுத்தாமல், மழை குறைபாட்டைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டின் பங்கான நீரை கர்நாடக மாநிலம் விடுவிக்காததால் குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பா பயிரும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு சேர வேண்டிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்திட வேண்டும் எனக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

ஒன்றியத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பது போல் – இரண்டாவது கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிக்கான நிதிஒதுக்கீட்டையும் செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் முதல் சந்திப்பிலேயே வலியுறுத்தியும், இன்று வரை ஒன்றிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்காமல் இழுத்தடித்து, தமிழ்நாட்டு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தடைக்கல்லை ஏற்படுத்தி வருகிறது.

பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாடு சட்டமன்றமே நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க மசோதாவை இரண்டு முறை ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த பிறகும் ஒன்றிய அரசு அந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமலேயே இருப்பது பாஜக ஆட்சி தமிழ்நாட்டுக்கு செய்துவரும் மாபெரும் துரோகம். நீட் தேர்வு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும்.

பெண்ணுரிமை வழங்குவதில் தலைசிறந்த மாநிலமாக மட்டுமின்றி – “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை” அண்ணா பிறந்தநாளன்று செயல்படுத்தியுள்ள சூழலில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா பற்றி வாயே திறக்காமல் காலத்தை கழித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், இன்று அவர் வழியில் செயல்படும் முதல்வரும் மகளிர் மசோதாவை நிறைவேற்றக் கோரி எண்ணற்ற முறை கோரிக்கைகள் வைத்தும் அதன் மீதான விவாதத்திற்கு கூட பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. எனவே இந்த சிறப்பு கூட்டத்தில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப இக்கூட்டம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கே முன்னோடியாக சமூகநீதிக்கான குரல் எழுப்பும் நமது இயக்கம், இச்சிறப்பு கூட்டத்தொடரில், “மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் துறைகளில் முழு ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்”, “அரசுதுறைகளில் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்”, “தனியார் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்”, “பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள க்ரீமிலேயரை 25 லட்சமாக உயர்த்த வேண்டும்”, “உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளோடு “இடஒதுக்கீட்டுக்கு உள்ள 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கப்படும்” மசோதாவையும் இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்திலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

ஒன்றிய பா.ஜ.க. அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட “விஸ்வகர்மா யோஜானா” திட்டம், குலத் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்கு செல்ல விடாமல், பரம்பரை தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி. இத்திட்டத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள்.

எங்கள் ஆட்சி காலத்தில் நாட்டையே மாற்றுவோம் என பேசி வந்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது “இந்தியா” கூட்டணிக்கு அஞ்சி “பாரத்” என்று நாட்டின் பெயர் மாற்றுவதிலேயே உன்னிப்பாக இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் – முற்றிலும் தோல்வியுற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசை, நாடாளுமன்றத்தில் “இந்தியா” கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு இந்திய ஜனநாயகத்தை காத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *