சென்னை: ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி விவகாரத்தில் சிலர் மலிவான அரசியல் செய்து வருவதாக ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பனையூரில் அண்மையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையான நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிந்த கருத்து: “நேற்று இரவு முதல் அனைத்து ஊடகங்களும், சமூக ஊடகங்களும் ஏ.ஆர்.ரஹ்மானை மோசடிக்காரர் போன்று சித்தரித்து வருகின்றனர். சிலர் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். இசை நிகழ்ச்சியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சூழலுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே 100 சதவீத காரணம். ஆனால், அவரே அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
2016: மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை, கோவை, மதுரையில் ‘நெஞ்சே எழு’ இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
2018: கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி உதவினார்.
2020: கரோனா காலகட்டத்தின்போது பல குடும்பங்களுக்கு அந்த மாதத்துக்கு தேவையான உதவிகளை செய்தார்.
2022: லைட்மேன்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு இலவச இசை நிகழ்ச்சி நடத்தினார். பேசும்முன் யோசிக்கவும்” என்று கதீஜா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
— Khatija Rahman (@RahmanKhatija) September 11, 2023